நினைவைவிட்டு என்றும் நீங்கா மானமிகு சுயமரியாதைப் புலவர் கோ. இமயவரம்பன்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தமிழ்ப் புலவர் படிப்புக்கு   குத்தாலம் (மயிலாடுதுறை) அருகே உள்ள கதிராமங்கலத்திலிருந்து வந்து  சேர்ந்தவர்.  ‘பட்டு’ என்ற பெயருள்ள கழகக் கொள்கை மாணவர்.

நான் விடுதியில் தங்கி B.A. Honours வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இணை பிரியா தோழர்களானோம்.

அவர் பெரியார் கொள்கை நெறியாளர் மட்டுமல்ல  – வெறியாளரும்கூட!

வசதி படைத்த நிலக்கிழார் குடும்பம் . அவரது மாமாதான் இவருக்குக் காப்பாளர். இவரது மறைந்த தாய், தந்தையர் ஏராளமான நில புலம் வைத்திருந்தவர்களாவர்.

எங்களது நட்பு – உயிர் நட்பாக நாளும் இறுகியது – எங்கள் குருதிக் குடும்பத்திலும் முக்கியமானவர்.

என் திருமணத்தைத் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் திருச்சியில் 7.12.1958இல் நடத்தியபோது, என்னுடன் திருச்சிக்கு வந்தவர். அய்யாவிடமே தொண்டு ஊழியராக – எவ்வித ஊதியமும் பெறாமலே சேர்ந்தது குறித்து – தந்தை பெரியார் அவர்கள், என்னை ‘விடுதலை’க்கு வரவேற்றதுபோல –   அவரது தன்னலத் துறப்பையும் பாராட்டி எழுதினார்; தந்தை பெரியார் தன் தனிச் செயலாளராகவே ஆக்கிக் கொண்டார்.

அய்யா மறைவு வரையில், அய்யாவிடம் உரிமை எடுத்துக் கொள்ளும் மெய்க்காவலர் – தனிச் செயலாளர். அதன் பிறகு அன்னையார் தலைமை நிலையிலும் அவரே அம்மாவுக்கும் செயலாளர்.

அதன் பிறகு நாகம்மையார் குழந்தைகள் இல்லத் தாளாளராகவும் திருச்சி – பெரியார் மாளிகையில் தங்கி,  எனது உயிர்த் தோழர் என்ற உறவு என்றும் எங்களிடம் இருந்தாலும் ,  என்னைத் ‘தலைவராக’க் கருதி அதன் பின்பு நடந்து வந்தது என்னை மிகவும் ‘சங்கடத்திற்கும்’ உள்ளாக்கியது.

அதுதான் இந்த இயக்கமும், நமது அறிவாசானும் நமக்குக் கற்பித்த பாடம் .

ஒவ்வொரு மாதமும் வீட்டிலிருந்து அவருக்குப் பணம் வரும். அதைத்தான் செலவழிப்பார் – இயக்கத்தில் எந்தப் பொருளையோ , எதையுமே பெற்றதில்லை.

குழந்தை உள்ளமும், கொள்கை உணர்வும், சற்றும் அயராத நிலையும் இணைந்த, பகுத்தறிவாளர் – சுயமரியாதைப் புலவர்.

அய்யா உரைகளை அவர்தான் நாளும் எழுதி அனுப்பி, ‘விடுதலை’யில் வெளியிட ஆவன செய்தார்.

தந்தை பெரியார் அவர்கள் அவரைத் தனது அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்களில் ஒருவராக நியமித்தார்.

அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு 9.8.1994இல் மறைந்தார்.

31 ஆண்டுகள் ஓடிய நிலையில்,

‘இழக்கக் கூடாத வரை இழந்தோம்!’ என்றே, இன்றும் நினைத்து நினைத்து அவருக்குப் புகழ் வணக்கத்தைக்கூறி ஆறுதல் அடைகிறோம்.

 

 

சென்னை        தலைவர்

9.8.2025 திராவிடர் கழகம்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *