புதுடில்லி, ஆக.8 பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை 9-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில், கடந்த ஆகஸ்ட், 1-ஆம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 7 கோடியே 24 லட்சம் வாக்காளர் களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.
அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தர மாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் காணவில்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து இருப்ப தாகவும், அதனால் மேற்கண்ட 65 லட்சத் துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜால் புயன், கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (6.8.2025) இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. மனுதாரரான ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தொண்டு நிறுவனம், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களையும், நீக்கத்துக்கான காரணத்தையும் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி புதிய மனு தாக்கல் செய்தது.
ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணிடம் நீதிபதிகள், ‘‘தற்போது வரைவு பட் டியல் மட்டுமே வெளியாகி உள்ளது. நீக்கத்துக்கான காரணம் பின்னர் தெரிய வரும்’’ என்று கூறினர். அதற்கு பிரசாந்த் பூஷண், ‘‘நீக்கப்பட்ட வாக் காளர்களின் பட்டியல், அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்காளர்கள் இறந்து விட்டனரா அல்லது இடம்பெயர்ந்து விட்டனரா என்று அதில் விளக்கம் அளிக்கப்படவில்லை’’ என்று கூறினார்.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதிகள், “நீக்கப்பட்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விவரங்களை 9-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் நகலை ஜனநாயக சீர்திருத்த சங்கத்திடம் அளிக்க வேண்டும். அதை பிரசாந்த் பூஷண் பார்க்கட்டும். என்ன சேர்க்கப்பட்டுள்ளது, என்ன சேர்க்கப்படவில்லை என்று பிறகு பார்ப்போம்” என்று தெரிவித்தனர்.
வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், ‘‘கணக்கீட்டு படிவம் அளித்த வாக்காளர் களில் 75 சதவீதம்பேர், 11 ஆவணங்களில் எதையும் சமர்ப்பிக்கவில்லை. இருப்பினும் அவர்களின் பெயர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களின் பரிந்துரையுடன் வரைவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன’’ என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், ‘‘ஆகஸ்டு 12-ஆம் தேதி விசாரணை தொடங்குகிறது. அப்போது, நீங்கள் குற்றச்சாட்டுகளை கூறலாம்’’ என்று கூறினர்.