புதுடில்லி, ஆக.7- டில்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக டில்லி காவல்துறை அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, திங்கள்கிழமை காலை சாணக்யபுரியின் சாந்திபாத் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுதா எம்.பி. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், பறிக்கப்பட்ட சங்கிலி மீட்கப்பட்டுள்ளது என்றும் டில்லி காவல் துறை ‘எக்ஸ்’ சமூக வலைத் தளத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.