சென்னை, ஆக. 6- சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது என பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆவின் முகவர்களுக்கு உறைகலன் வழங்குதல், ஆவின் பாலகங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணையை, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;
சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ.25 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு சுமார் ரூ. 33 கோடிக்கு விற்பனை அதிகரித்துள்ளது.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலகங்களில் தொடர் தேவையை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவின் பாலகங்களில் 200க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொக்ரான் சோதனைகள் விவரங்கள் கசிவு
டிஆர்டிஓ விருந்தினர் மாளிகை மேலாளர் கைது
ஜெய்ப்பூர், ஆக. 6- ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் சோதனை மய்யத்தில் நடைபெறும் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) சோதனைகள் குறித்த ரகசியத் தகவல்கள் பாகிஸ்தானுக்குக் கசிந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையின் மேலாளர் மகேந்திர பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டிஆர்டிஓ மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும்போது, அவர்கள் பார்வையிடும் சோதனைகளின் விவரங்கள் பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே சென்றடைவதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், விருந்தினர் மாளிகையை நிர்வகிக்கும் மகேந்திர பிரசாத் மீது சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, இந்த தகவல்கள் எவ்வாறு கசிந்தன என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.