தமிழ்ப் பெருமிதங்களை உணர்த்தும் ‘மாபெரும் தமிழ்க் கனவுத் திட்டம்’ இன்று தொடங்குகிறது

1 Min Read

சென்னை, ஆக.6- கல்லூரி மாணவர்களிடையே தமிழர் மரபையும், தமிழ்ப் பெருமிதங்களையும் உணர்த்தும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ திட்டத்தின் கீழ் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் அண்ணா நினைவு நாளான 3.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022-2023 மற்றும் 2023-2024 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் 200 இடங்களில் 2,000 கல்லூரிகளைச் சேர்ந்த 2 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்பாக நடத்தப்பட்டன.

தமிழ் இணையக் கல்வி கழகம் உயர்கல்வித் துறையுடன் இணைந்து இந்நிகழ்ச்சிகளை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கலை அறிவியல், பொறியியல், வேளாண்மை, சட்டம், மருத்துவம் என அனைத்து வகையான கல்லூரிகளிலும் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

மொத்தம் 200 கல்லூரிகளில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் நிகழ்விடக் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பங்குபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் முதல் நிகழ்வுகள் இன்றும் (6.8.2025), நாளையும் (7.8.2025) கோவை, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, விழுப்புரம், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் நடைபெற உள்ளன.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், ‘ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாபெரும் தமிழ்க் கனவு. சமூகச் சமத்துவம், தமிழ் மரபு, தமிழர் தொன்மை, பண்பாட்டுச் செழுமை, மொழி முதன்மை, இலக்கிய வளமை, கலைப் பன்மை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்குக் கடத்துவதே திராவிட மாடல் அரசின் தலையாய கடமை.

50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 லட்சம் மாணவர்களுடன் மாபெரும் தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் தொடங்குகிறது. அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம். தமிழால் இணைவோம். தமிழராய் உயர்வோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *