சென்னை, ஆக.6 பத்திரிகை யாளர் நல வாரியத்திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.
பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.
பத்திரிகையாளர் நல வாரியத் திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை செயலாளர் ராஜாராமன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“பத்திரிகை அலுவலர் நல வாரியம் கடந்த 1.12.2021 அன்று உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பத்திரிகை நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்துவதற்கு ஏதுவாக, செய்தித் துறை அமைச்சரை தலைவராகவும், 7 உயர் அரசு அதிகாரிகளை அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும், 6 பத்திரிகை யாளர்களை அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் கொண்டு அரசாணை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் அச்சு, காட்சி ஊடகம் மற்றும் கால முறை இதழ்களை சேர்ந்த ஊடகவியலாளர்களும் இடம் பெறும் வகையில், அலுவல்சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கையை 6-இல் இருந்து 9-ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. எனவே வாரியத்தின் புதிய அலுவல்சாரா குழு உறுப்பினர்களை அரசுக்கு பரிந்துரைக்கும்படி அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் பரிந்துரைப்படி பத்திரிகையாளர் நலவாரியத்தின் புதிய அலுவல்சாரா குழு உறுப்பினர் களை அரசு நியமித்து உத்தர விடுகிறது.
அந்த வகையில், ‘தினத்தந்தி’ குழுமத்தின் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், ‘தினகரன்’, ‘தமிழ் முரசு’ நாளிதழ்களின் நிர்வாக ஆசிரியர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால், ‘தி இந்து’ நாளிதழ் துணை ஆசிரியர் கோலப்பன், ‘தி வீக்’ வார இதழின் முதன்மை சிறப்பு செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன், ‘மாலை முரசு’ தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் தம்பி தமிழரசன், ‘தீக்கதிர்’ செய்தியாளர் கவாஸ்கர், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் சிறப்பு செய்தியாளர் ரமேஷ், ‘நியூஸ் 18’ தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் தமிழரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.”
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.