சென்னை, ஆக. 5- பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் களைத் தமிழ்நாட்டில் வாக்காளர்களாகச் சேர்ப்பது சட்டவிரோதமானது என மேனாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மாநிலத்தின் தேர்தல் சூழலை மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று முன்தினம் (3.8.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேரை வாக்காளர்களாகச் சேர்ப்பது என்பது சட்டவிரோதமானது,” என்று கூறியுள்ளார்.
அவமதிக்கும் செயல்
பீகார் தொழிலாளர்களை “நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்” என்று அழைப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதிப்பதாகும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், இது தமிழ்நாடு வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கேள்விகள்
“புலம்பெயர்ந்த பீகார் தொழிலாளி, தங்கள் மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஏன் செல்லக் கூடாது?” “சத் பூஜை விழாவின்போது, புலம்பெயர்ந்த தொழிலாளி பீகாருக்குத் திரும்பவில்லையா?” என்று
ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“வாக்காளராகப் பதிவு செய்யப்பட வேண்டிய ஒருவருக்கு நிலையான, நிரந்தர சட்டப்பூர்வ வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பீகாரில் நிரந்தர முகவரி உள்ள நிலையில், அவரைத் தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?” என்றும் அவர் வினவியுள்ளார்.
அடுக்கடுக்கான
குற்றச்சாட்டுகள்
தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்து, மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிப்பதாகவும் ப.சிதம்பரம் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் எதிர்த்து அனைவரும் போராட வேண்டும் என்றும் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.