ஆடு மாடுகளை மேய்த்து வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்த மக்களாக ஆக்கப்பட்டவர்கள் நாம்! காரணம் – பிறப்பின் அடிப்படையில் நாம் கீழ் ஜாதி – பார்ப்பான் காலடியில் பிறந்த சூத்திரர்கள் – படிக்க உரிமையற்றவர்கள் – உடலுழைப்புக்காரர்கள் – விபசாரி மக்கள் என்று ஆக்கப்பட்டவர்கள் – ஆரிய ஆதிக்கக் கும்பலால்!
கடவுளின் பெயராலும். மதத்தின் பெயராலும் இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டதால், தங்களின் பிறவி அடிமை நிலையின் இழிவைக்கூட, காலம் காலமாகப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக – இது நமது தலைவிதி – கடவுள் நம் தலையில் பிறக்கும் பொழுதே எழுதிய எழுத்து – அதை யாராலும் அழிக்க முடியாது – மாற்ற முடியாது என்றிருந்த மிகக் கேவலமான நிலையைத் தலைகீழாகப் புரட்டித் தள்ளி, ஆணி வேரை அறுத்தெறிந்து –
‘நூற்றுக்கு 97 பேர்களான திராவிட மக்களாகிய நாம் தான் இந்த மண்ணுக்குரியவர்கள் – ஆனால் ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு மாடுகளை ஓட்டிவந்த ஆரியக் கூட்டம் நயவஞ்சகமாகத் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள்’ என்று அடையாளம் காட்டி, பகுத்தறிவையும், சுயமரியாதையையும் ஊட்டியவர் தந்தை பெரியார் – ஊட்டிய இயக்கம் சுயமரியாதை இயக்கம் – திராவிட இயக்கம்.
நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டமல்ல – ஆரியர் – திராவிடர் போராட்டம் என்பார் தந்தை பெரியார்.
நம் மக்கள் ஒடுக்கப்பட்டதற்கும், தாழ்த்தப்பட்டதற்கும், இழிவுபடுத்தப்பட்டதற்கும் காரணமானவற்றை ஒழிப்பது தான் உண்மையான மக்கள் புரட்சி!
முதலாவதாகக் கல்வி உரிமை! அதை ஈட்டித் தருவதற்காகத் தந்தை பெரியார் முதல் பச்சைத் தமிழர் காமராசர் உட்பட திராவிட இயக்க ஆட்சி – இன்றைய சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை, கல்வி உரிமையை முதலாவதாக உள்ளடக்கிய சமூக நீதிக்காக அயராது பாடுபட்டதால், கடும் விலை கொடுத்துத் தொண்டாற்றியதால் – பெரும் ஏற்றமும் மாற்றமும் பெற்றுள்ளோம்.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே கல்வியில் முதல் நிலையில் தமிழ்நாடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆடு மேய்த்த சமூகத்திலிருந்து அய்.ஏ.எஸ்.கள் தோன்றினர். மாடு மேய்த்த பரம்பரை மாவட்ட ஆட்சியாளர்களாக, நிர்வாகத்தின் உச்சக்கட்ட பதவிகளின் செயலாளர்களாக, தலைமைச் செயலாளராக பெரு நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.
பனை ஏறிகள் என்றும், பார்த்தாலே தீட்டு என்றும், இழிவுபடுத்தப்பட்ட நம் மக்கள் மருத்துவ நிபுணர்களாக, பொறியாளர்களாக, இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகளாக மேலே மேலே உயர்ந்து ஒளி வீசுகிறார்கள்.
முதன்முதலாகக் குடியரசுத் தலைவராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் அவர்களால் வர முடிந்தது.
வறுமை மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் சிரமப்பட்டுப் படித்து, பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராக வெளியே வந்தார்.
வெளிநாடு சென்று படிக்க விரும்பினார். வாய்ப்புகள் கிட்டவில்லை. அப்பொழுது திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யரை அணுகி, தன் கல்விக்கேற்ற வேலை வாய்ப்பினைத் தருமாறு கேட்டபோது, திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யர் என்ன செய்தார் தெரியுமா?
ஒரு தென்னங்கன்றைக் கொடுத்து ‘மரம் ஏறிப் பிழைத்துக் கொள்’ என்று சொன்ன ஜாதி ஆணவத்தை எண்ணினால் இப்பொழுதுகூட குருதி கொதிக்கிறது.
இவற்றையெல்லாம் கடந்து நம் மக்கள் மேலே ஏறி வரும்போது தமிழ்நாட்டில் ஒரு நபர், கட்சி ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கும், வளர்ச்சிக்கும், தன்மானத்திற்கும், கல்வி வளர்ச்சிக்கும், உத்தியோக வாய்ப்புக்ககாகவும் பாடுபட்ட தந்தை பெரியாரையும், அவர் வழி நின்று பாடுபட்டவர்களைக் கொச்சைப்படுத்தி, வாயை வாடகைக்குக் கொடுத்து உளறிக் கொட்டிக் கொண்டிருப்பது போதாது என்று –
ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு போராட்டம் நடத்துகிறார். அதாவது மீண்டும் ஆடு மாடுகளை மேய்த்து வயிற்றை நிரப்பிக் கொள்ளுங்கள் – உங்களுக்கு எல்லாம் கல்வி எதற்கு? உத்தியோகம் எதற்கு? என்று போராட்டம் நடத்துகிறார் என்றால், இந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்ல!
‘ஆடு மாடுகள் மேய்ப்பது தொழில் முறையல்ல – எங்களது வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு’ என்று சொல்லும் அளவுக்குப் புத்தி சீழ் பிடித்து சீர் கெட்டுப் போய் விட்டது.
தொழில் முறையல்ல, வாழ்க்கை முறையாம் – குலத் தொழில் என்பதை வேறு முறையில் சொல்லுவது தானே இது!
பனைமரத்தில் ஏறிக் காட்டுகிறார். ‘பனை ஏறிகளே, உங்களுக்குப் படிப்பு எதற்கு?’ என்று பார்ப்பன வாடகை ஒலி பெருக்கியாக திரிந்துக் கொண்டு இருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் தொழிலாகக் கருதி பனை ஏறுவதற்குக் கூட கருவிகளே வந்துவிட்டன என்று இந்த அறியாமைப் பிண்டத்துக்குத் தெரியாதா?
‘எனக்குள்ள குறைபாடு எல்லாம் தமிழர்களில் விபூஷணர்கள் பெருகிக் கொண்டு இருக்கிறார்களே என்பதுதான்!’ என்றார் நமது இனநலப் பாதுகாவலர் தந்தை பெரியார். அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.
ஒரு பக்கம் ‘நீட்’ என்றும், ‘ஜேஇஇ’ என்றும், ‘க்யூட்’ என்றும், ‘கிளாட்’ என்றும், ‘நிஃப்டு’ என்றும் நுழைவுத் தேர்வுகளைத் திணித்து, நம் மக்களை உயர் படிப்புகளுக்குச் செல்ல விடாமல் தடுக்கும் கண்ணி வெடிகளைப் பார்ப்பன ஒன்றிய அரசு நயவஞ்சக முறைகளாகக் கையாளுகிறது என்றால், இன்னொரு பக்கம் இது போன்றதுகள் – நம் மக்களின் காலைப் பிடித்து இழுக்கும் கயமைத் தனத்தில் ஈடுபடும் அனுமார்களை அடையாளம் காண வேண்டாமா?
இதுகளுக்கு 8 சதவிகித வாக்குகள் இருக்கின்றனவாம்! ஏன், 80 சதவிகிதம் என்று கூட சொல்லிக் கொள்ளலாமே! யார் தடுக்கப் போகிறார்கள்?
விபூதி வீரமுத்து சாமி என்றும், அணுகுண்டு அய்யாவு என்றும் ஒரு காலத்தில் தந்தை பெரியார் பற்றியும், நம் இயக்கத்தைப் பற்றியும் துர்நாற்றம் எடுக்கக் கூலிக்கு மாரடித்ததுண்டு.
அதே விபூதி வீரமுத்து தஞ்சைப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரை கூட்ட மேடையில் சந்தித்து, மாலை அணிவித்து, மன்னிப்புக் கேட்டதும் உண்டு என்பதையும் நினைவூட்டுகிறோம்.