கன்னியாகுமரி, ஆக.3 தமிழ்நாடு மீனவர்களுக்கு 2 வாரங்களில் லைப் ஜாக்கெட் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த அருளப்பன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் உரிமம் பெற்று படகு வைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். மீன்பிடி படகுகளில் கடலுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக லைப் ஜாக்கெட் பெற்றுக் கொள்வது கட்டாயம் என்று தேங்காய்பட்டினம் துறைமுக மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் நான் நான்கு லைப் ஜாக்கெட் வழங்கும்படி கேட்டு அதற்கான தொகை ரூ.2,472அய் கடந்த பிப்ரவரி மாதம் செலுத்தினேன். என்னை போல மீன்பிடி படகுகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் லைப் ஜாக்கெட் வழங்குமாறு கேட்டு உரிய தொகையை செலுத்தி விட்டனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எங்களுக்கு லைப் ஜாக்கெட் வழங்கவில்லை. கடலில் அவ்வப்போது காலநிலை மாறுகிறது.
இதனால் படகுகளில் கடலுக்குள் செல்லும் நாங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பாதுகாப்பற்ற நிலையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளோம். எனவே எங்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அரசுத்தரப்பில், லைப் ஜாக்கெட்டுகள் அனைத்து மீனவ கிராமங்களிலும் வழங்கப் பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தமிழ்நாடு மீனவர்கள் அனைவருக்கும் 2 வாரத்தில் லைப் ஜாக்கெட்டுகளை வழங்கவும், 3ஆவது வாரத்தில் அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு மீன் வளத்துறை செயலருக்கு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.