ஒரு தேசத்தின் கல்வி முறை, அதன் எதிர்காலச் சந்ததியின் கனவுகளை வடிவமைக்கிறது.
ஆனால் நீட் போன்றவைகள் ஒட்டுமொத்த தேசத்தின் திறமைசாலிகளின் கனவைக் கரைத்து விடுகின்றன என்பதற்கு, நந்தகுமார் மற்றும் அனிதா எடுத்துக்காட்டுகளாகும்.
2014ஆம் ஆண்டில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், நடிகர் சூர்யாவின் “அகரம்” அமைப்பு நடத்திய “விதை” என்ற நிகழ்ச்சி, தமிழ்நாட்டின் கல்வித் தரத்தையும், மாணவர்களின் கனவுகளையும் காட்சிப்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில், பெரம்பலூருக்கு அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்ற மாணவனின் கதை, பலரின் கவனத்தை ஈர்த்தது.
நந்தகுமாரின் கனவு
கூலி வேலை செய்து கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த அப்பா, அம்மா. வீட்டில் மின்சார வசதிகூட இல்லாத வறுமையான சூழல். அரசுப் பள்ளி, சத்துணவு, தெருவிளக்கு வெளிச்சம் – இவையே நந்தகுமாரின் கல்விக்கான ஆதாரங்கள். இருப்பினும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1160 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவக் கல்விக்கான கட் ஆஃப் மதிப்பெண்களான 199அய் பெற்றிருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், “நீ என்னவாக ஆக வேண்டும்?” என்று கேட்க, “நான் டாக்டர் ஆக வேண்டும்” என்று தீர்க்கமாகப் பதிலளித்தார் நந்தகுமார்.
அவரது தாயார், “என் மகன் டாக்டர் ஆகி, அவன் பெயருக்குப் பின்னால் ‘டாக்டர்’ என்று போட்டு, எங்க ஊர் மக்களுக்குச் சிகிச்சை செய்ய வேண்டும்” என்று கனவுடன் கூறினார். கல் உடைத்து கைகளில் காப்பு காய்த்து, விரல்களை மடக்க முடியாத நிலையில் இருந்தாலும், ஒருநாள்கூட மகனை வேலைக்கு அழைக்காமல், அவன் கல்விக்கு உறுதுணையாக நின்ற அந்தத் தாயின் தியாகம் நெஞ்சைத் தொட்டது.
நீட் இல்லாத காலத்தில் நந்தகுமாரின் வெற்றி
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் உதவியுடன், நந்தகுமார் மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்று, தனது மருத்துவக் கனவை நனவாக்கினார். இன்று, தன் தாயின் ஆசையைப் போலவே, ஒரு மருத்துவராகி, தான் பிறந்த கிராமத்து மக்களுக்குச் சேவை செய்கிறார். வறுமையைப் போக்க கல்விதான் சிறந்த ஆயுதம் என்பதை ஆழமாகப் புரிந்துகொண்ட நந்தகுமார், தன்னைப் போலவே பல கிராமத்து மாணவர்களைப் படிக்க வைத்து, கல்வி என்னும் ஒளிக்கீற்றை அவர்களுக்கு ஏற்றி வைக்கிறார். “அவரைப் போல அந்தக் கிராமத்திலிருந்து இன்னும் 10 பேர் படிக்க வருவார்கள்” என்ற நம்பிக்கை விதையை அவர் விதைத்துள்ளார்.
நந்தகுமாரின் இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், அந்தக் காலகட்டத்தில் நீட் தேர்வு இல்லை என்பதுதான். 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடந்ததால், கிராமப்புற மாணவர்களும், பின்தங்கிய நிலையிலிருந்த மாணவர்களும் தங்கள் கடின உழைப்பால் சாதிக்க முடிந்தது.
அனிதாவின் கனவைச் சிதைத்த ‘நீட்’
ஆனால், 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நிலைமை தலைகீழானது. அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவியின் கதை, நீட் தேர்வின் மற்றொரு பக்கத்தைச் சித்தரித்தது. 12ஆம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்த அனிதா, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக் கனவை எட்ட முடியாமல் போனார். “என் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அனைத்தும் குப்பை ஆகிவிட்டன” என்று அவரது ஆதங்கம், நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுகளை எப்படித் தகர்த்தது என்பதற்கு ஒரு சான்று.
நந்தகுமாரின் காலத்தில் நீட் இல்லாததால் ஒரு கனவு நனவானது, அனிதாவின் காலத்தில் நீட் இருந்ததால் ஒரு கனவு கரைந்துபோனது. இந்த இருவேறு நிகழ்வுகளும், பாசிச சக்திகளின் தலையீடு சமூகத்தின் பல்வேறு பிரிவினரை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணர்த்துகின்றன. மருத்துவக் கல்விக்கான சேர்க்கை முறைகள், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் நீட் என்னும் அரக்கன் இனியும் நமது பிள்ளைகளின் உயிரோடு விளையாட விடக்கூடாது என்பதற்கான போராட்டம் தொடர்கிறது.