வறுமை ஒழிந்து விட்டதா? மோடி அரசின் மற்றொரு “ஜூம்லா?”

ஜனவரி 2024 இல், நிட்டி (NITI) ஆயோக் தனது விவாதக் கட்டுரையில், உடல்நலம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் போன்ற பல அளவுருக்களைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் ‘பல பரிமாண வறுமை’ 11.3 சதவீதமாக இருந்ததாக தெரிவித்தது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 2013-2014இல் 29 சதவீதமாக இருந்த வறுமை 2022-2023இல் 11.28 சதவீதமாக குறைந்துள்ளது என்பதும் ‘அரசாங்கத் துடன் இணைந்த’ ஊடகங்களால் பெரிதாக ஊதிப் பரப்பப்பட்டது.
இதை விட அதிர்ச்சியூட்டும் பதிவுகள் உள்ளன என்கிறார் தி குயின்ட் பத்திரிக்கையின் கட்டுரையாளர் ரோஹிட் கன்னா.

ஒரு மாதத்திற்குப் பிறகு, நிட்டி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் வறுமை உண்மையில் மேலும் வீழ்ச்சியடைந்து வெறும் அய்ந்து சதவீதமாக இருப்பதாகக் கூறினார்.
2022-2023 இல் நடத்தப்பட்ட குடும்ப நுகர்வு செலவினக் கணக்கெடுப்பை (HCES) படித்ததன் அடிப்படையிலும், சமீபத்தில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) வெளியிட்ட தகவலின் அடிப்படையிலும் அவரது கூற்று அமைந்தது, அதாவது சனவரி 2024ல் 11.8 சதவீதமாக இருந்த ஏழை களின் வறுமை விகிதம், ஒரே மாதத்தில், பிப்ரவரி 2024இல் அய்ந்து சதவீதமாக குறைந்துள்ளதாம். It is a great miracle.

ஆனால் இந்த கூற்றின் உண்மை நிலையை ஆராய்வோம். இந்தியாவின் மிக ஏழ்மையான அய்ந்து சதவீதத்தினரின் வருமானம் ஒரு நாளைக்கு 46 ரூபாய் என்றும், ஏழைகளில் 10 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 59 ரூபாய் என்றும், ஏழ்மையான 20 சதவிகிதத்தினர் ஒரு நாளைக்கு 70 ரூபாய் வருமானம் என்றும் குடும்ப நுகர்வு செலவினக் கணக்கெடுப்பு (HCES) கணக்கிடுகிறது.
மோடி அரசுக்குள்ள நிர்பந்தம் (‘மஜ்பூரி’)
இன்று, உருளைக்கிழங்கு கிலோ 14 ரூபாய், வெங்காயம் கிலோ 40 ரூபாய், பால் அரை லிட்டர் 30 ரூபாய், இதில் உப்பு, ஆட்டா (கோதுமை மாவு), அரிசி, சமையல் எண்ணெய் – வெறும் அத்தியாவசியப் பொருட்கள் – சேர்க்கலாம்.

ஒரு நாளைக்கு 70 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரால் இவ்வளவு பொருட்களையும் மோடியின் ஆட்சியில் வாங்க முடியும் என்று நாம் நம்புவோமாக?
அப்படியானால், அப்படிப்பட்டவர் மிகவும் ஏழை இல்லையா?
நிட்டி ஆயோக் வறுமையின் எந்த அளவு கோலைப் பயன்படுத்துகிறது? அல்லது 2024 நாடாளு மன்ற தேர்தலுக்கு முன் தனது அரசியல் முதலாளி களை நல்லவர்களாக மாற்ற நிட்டி ஆயோக் தலைவர் முயற்சி செய்கிறாரா? ஆம் எனில், அது அவருடைய வேலையா? இல்லை.
உண்மையில், நிகழ்காலத்தைப் பற்றி ஒரு நேர்மையான படப்பிடிப்பைத் தந்து, எதிர்காலத்தைத் திட்டமிட அதைப் பயன்படுத்துவதுதான் அவரது வேலை. எனவே தான் நிட்டி ஆயோக்கின் முந்தைய அவதாரத்தின் பெயர் – ‘திட்டக் குழு’.
இன்று, அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 81 கோடி மக்களுக்கு அய்ந்து கிலோ இலவச தானியங்களை வழங்குவதாக தம்பட்டம் அடிக்கிறது. அதாவது இந்திய மக்கள் தொகையில் 57 சதவீதம். மேலும் இதை மேலும் அய்ந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது பாஜகவின் மிகப்பெரிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். ‘மோடி சர்க்கார் கி கியாரண்டி’ என்ற பெயரில் ஊடகங்களில் இது பொதுமக்களுக்காக விளம்பரப்படுத்தப்படுகிறது.

உண்மையில் மோடி அரசுக்கு இது ஒரு மஜ்பூரி, ஒரு நிர்ப்பந்தம் என்று சொல்வதுதான் உண்மையாகும். அப்படி கூறுவதுதான் இன்றைய இந்தியாவின் உண்மையான பசி மற்றும் வறுமை நிலைகளை அமைதியாக ஏற்றுக்கொள்வதாக இருக்கும்..
வறுமை ஒழிப்பு ஒரு பெரிய சவாலாக உள்ளது, அதை வீழ்த்த பல ஆண்டுகள் ஆகும். வறுமைக்கு எதிராக அரசு தனது சிறிய ஆனால் கடினமான முயற்சிகளை செய்து வருகிறது என்று வேண்டு மானால் சொல்லிக் கொள்ளலாம். அதற்குப் பதிலாக, புள்ளிவிவரங்களில் ஒரு சுழல் வைப்பதன் மூலம் வறுமை முழுமையாகக் கையாளப்பட்டுவிட்டதாகக் கூறுவதில் மோடி அரசு முனைப்பாகத் தெரிகிறது.
வறுமை ஒழிந்துவிட்டது என்று பாசாங்கு செய்வதன் மூலம் நமது ஏழை சக குடிமக்களை நாங்கள் அவமதிக்கிறோம்
ஊடகங்களில் வந்த படங்கள் நினைவிருக்கிறதா? 2020 இல் டொனால்ட் டிரம்ப் அகமதாபாத்திற்குச் சென்றபோது இந்தியாவின் வறுமையை உண்மையில் ‘மறைக்க’ சுவர்கள் கட்டப்பட்டன. இதற்கு முன்பும், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே 2017 இல் அகமதாபாத்திற்குச் சென்றபோது, நமது நகர்ப்புற ஏழைகளை ‘மறைக்க’ பச்சைத் திரைகள் வைக்கப் பட்டன. செப்டம்பர் 2023 இல், G20 உச்சிமாநாட்டின் போது டில்லியின் சேரிகளை மறைக்க அதே பச்சைத் திரைகள் மீண்டும் வந்தன.

வறுமையை ஒழித்துவிட்டதாக நிட்டி ஆயோக் கின் விகாரமான கூற்றினை நாம் முற்றிலுமாக நிராகரிக் கிறோம்.
அத்துடன், நிட்டி ஆயோக்கிடம் சில கேள்வி களைக் கேட்போம்.
· இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 67 சதவீத குழந் தைகளும், 15 முதல் 50 வயதுக்குட்பட்ட நமது பெண் களில் 57 சதவீதமும் ஏன் இந்தியாவில் இரத்த சோகை யால் ஏன் பாதிக்கப்பட்டுள்ளனர்? பதில்: வறுமை.
· இன்றும் 15.4 கோடி தொழிலாளர்கள், அதாவது இந்தியாவின் மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஏன் பதிவு செய்யப்பட்டுள்ளனர்? பதில்: வறுமை.

வறுமையில் உள்ளோர் மக்கள் தொகையில் அய்ந்து சதவீதமே என்ற நிட்டி ஆயோக் தலைவர் சுப்ரமணியத்தின் கூற்றின் மீது கேள்வி எழுப்பி யுள்ளார் தொழிலாளர் குறித்த பொருளாதார நிபுணர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா. 2019 முதல், ஆறு கோடி மக்கள் விவசாயம் அல்லாத துறையிலிருந்து, விவ சாயத்திற்கு திரும்பியுள்ளனர். அய்ந்து கோடி மக்கள் ஊதியம் இன்றி குடும்ப உழைப்புக்கு திரும்பியுள்ளனர். முக்கியமாக 2016இல் இருந்து உற்பத்தி வேலைகள் குறைந்துவிட்டன. இவை அனைத்தும் வீழ்ச்சி யடைந்த ஊதியங்களைக் குறிக்கிறது, இது மீண்டும் வறுமை அதிகரிப்பை குறிக்கிறது.
அப்படியென்றால், இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் இந்தியாவில் வறுமை அய்ந்து சதவீதமாக இருப்பதாகக் கூறுகின்றனவா? நிச்சயமாக இல்லை.

இங்கே வறுமை 11 சதவீதத்திலிருந்து அய்ந்து சதவீதமாக ஒரே மாதத்தில் குறைந்தது என நிட்டி ஆயோக் கூறுகிறதே?
இது ஒரு அதிசயமாக இருக்க முடியுமா? இல்லை.
அது கூட சாத்தியமா? இல்லை.
எனவே, அது உண்மையா? இல்லவே இல்லை.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வறுமை ஒழிந்துவிட்டதாகக் எப்படி சொல்ல முடியும்? அவ்வாறு வறுமை ஒழிந்து விட்டது என்று பாசாங்கு செய்வதன் மூலம், நமது ஏழை சக குடிமக்களை அவமரியாதையுடன் பார்க்கிறோம் என்பதுதானே பொருள் என மோடி அரசின் வறுமை ஒழிப்பு “ஜூம்லா’வை கிழித்து தொங்க விட்டுள்ளார், தி குயின்ட் பத்திரிக்கையின் கட்டுரையாளர் ரோஹிட் கன்னா.

வாசிங்டனில் இருந்து செயல்படும் பியூ ஆராய்ச்சி அமைப்பு (PEW Research Centre) மார்ச் 2021இல் வெளியிட்ட அறிக்கையில், கோவிட் பெருந் தொற்றுக் காலத்தில் இந்தியாவில் வறுமை அதிகரித் ததாகவும், நடுத்தர வர்க்கம் சுருங்கி விட்டதாகவும் தெரிவித்தது. மோடி அரசு, தனக்கு விரும்பாத எந்த தரவுகளையும் ஏற்றுக் கொள்ளாது. அரசின் செயல் பாட்டுக்குப் பெருமை சேர்க்காத, அசவுகரியமான தரவுகளை அரசே மறைத்து விடும். அந்த வகையில் பியூ அறிக்கையை அரசு ஏற்கவில்லை. இது மட்டுமல்ல, 2019இல் வேலைவாய்ப்பின்மை அதிகரித் துள்ளது என்ற அரசு நடத்தும் கணக்கெடுப்பின் முடிவுகளுக்கும் இதே கதி தான் நேர்ந்தது. விளைவு. கணக்கெடுப்பு நடத்திய புள்ளிவிவர ஆணையத்திலிருந்த இரு வல்லுநர்கள் அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர். இந்தியாவின் பொருளாதாரத் தரவுகள் நம்பகத் தன்மையை இழந்துவிட்டன என்று கூறி உலகில் பல பகுதிகளிலும் இருக்கும் 108 பொருளாதார வல்லு நர்களும், சமூக அறிவியலாளர்களும், அரசுக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதினர். இந்தியாவின் புள்ளி விவர இயந்திரம், ‘அரசியல் கணக்குகளின் தாக்கத்திற்குள் ளாகி விட்டதாலும், அரசியல் சக்திகளினால் கட்டுப் படுத்தப் படுவதாலும், சந்தேகத்திற்குரியதாகி விட்டது’ என்று இந்த அறிஞர்கள் எழுதினர். ”தரவுகளை மறைத்து, பிறகு அவற்றைக் கசிய விடுவதின் காரணமாக நாளடைவில் தரவுகள் என்றாலே தவறானவை என்கிற தோற்றம் ஏற்பட்டு, இந்தியாவின் புள்ளிவிவர அமைப்பைச் சோர்வடைய வைத்து விட்டது என்கிறார் இந்தியாவின் மேனாள் தலைமைப் புள்ளி விவரவியலாளரான ப்ரோனாப் சென். வறுமை ஒழிக்க வேண்டுமென்றால், தரவுகளின் வறுமையை ஒழிக்க வேண்டும்; நேர்மையின்மையை ஒழிக்க வேண்டும் என புதிய இந்தியா எனும் கோணல் மரம் என்ற நூலில் “வறுமையின் தரவுகளும், தரவுகளின் வறுமையும்” என்ற கட்டுரையில் விரிவாக குறிப் பிட்டுள்ளார் நூலாசிரியர் பரகால பிரபாகர்.
தகவல் திரட்டு: குடந்தை கருணா

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *