பள்ளி மற்றும் உயர்கல்வியில் சீர்திருத்தம் செய்கிறேன் என்று கூறிக்கொண்டு புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
அதாவது இதுவரை இருந்த கல்விக்கொள்கை மெகாலே கொண்டுவந்தது. இந்தியக் கலாச்சாரத்தை இழிவுபடுத்தி மேற்கத்திய கலாச்சாரத்தை இந்தியர்களிடையே திணிக்கும் சூழ்ச்சி என்று 100 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு இருந்த ஹிந்துத்துவக் கும்பல் ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்த உடன் இந்தக் கல்விமுறையை சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கை என திணித்துள்ளது.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி என்பது பொதுவான பட்டியலில் உள்ளதால் புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசினரால் இந்தியா முழுவதும் கொண்டுவரமுடியவில்லை.
ஏன் அவர்கள் ஆளும் மாநிலமான மகாராட்டிராவில் கூட அமல்படுத்த முடியவில்லை.
குலக்கல்வி – மொழித் திணிப்பே நோக்கம்
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் மூன்றாவது கல்விக் கொள்கையான தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020, ஒன்றிய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு அய்ந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த அய்ந்து ஆண்டுகளில் புதிய கல்விக் கொள்கையின் சீர்திருத்தங்கள் மிகவும் பிற்போக்குத் தனமாக உள்ளன. குலக்கல்வி மற்றும் சமஸ்கிருத – ஹிந்தித் திணிப்பிற்கே முக்கியத்துவம் அளிப்பதாகவும் உள்ளது.
என்.சி.ஆர்.இ.டி. பாடத்திட்டங்களில் மதவாதம்
புதிய கல்விக் கொள்கையின்படி ஒன்றிய அரசின் கீழ்வரும், என்.சி.ஆர்.இ.டி. பாடப் புத்தகங்களில் குறிப்பாக வரலாறு பாடப் புத்தகங்களில், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்களில், டில்லி சுல்தான் மற்றும் முகலாயப் பேரரசு குறித்த பல அத்தியாயங்கள் நீக்கப்பட்டிருப்பது அல்லது குறைக்கப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. உதாரணமாக, 7 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் இருந்து முகலாய ஆட்சியாளர்கள் குறித்த பல குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
தொடரும் வரலாற்று அழிப்பு
இந்திய வரலாற்றில் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்படுவது என்பது இந்தியாவின் 1500 ஆண்டுகால வரலாற்றை முற்றிலும் அழித்தொழிக்கும் வேலை ஆகும். அது முடியுமா என்பது வேறொரு கருத்து ஆனால், முகலாயர்களின் கட்டடக்கலை, நிர்வாகம் மற்றும் கலாச்சார பங்களிப்புகள் இல்லை என்றால் மண்மேடுகளாகத்தான் வட இந்தியாவை பார்க்க முடியும். டில்லி என்ற பெயரே கூட சுல்தான்களால் கொண்டு வரப்பட்டு முகலாயர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு இன்று இந்தியாவின் தலைநகராக உள்ளது. இவர்களின் வர்லாற்று அழிப்பைத் தொடர்ந்தால் டில்லி என்ற நகரமே இல்லாமல் போய்விடும்.
கல்வியாளர்கள் அச்சம்
ஈரானில் இருந்தும், துருக்கி மற்றும் மத்திய ஆசியாவான அஜர்பைஜான் போன்ற பகுதிகளிலிருந்தும் ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி, துக்ளக், அவர்களுக்குப் பிறகாக வந்த தைமூர், அவரது வம்சாவழிகளாக இந்திய தீபகற்பத்திற்குள் வந்து முகலாயப் பேரரசை உருவாக்கிய பாபர் மன்னர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள்ளேயே நடந்த போர்கள், மறைக்கப்பட்டு உள்நாட்டு அரசர்களோடு நடந்த போர்கள் மட்டுமே வரலாற்றில் எழுதப்பட்டுள்ளன. அதாவது இரண்டு மதப்பிரிவினரிடையே நடந்த போர் என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக மாணவர்கள் மனதில் நச்சு விதைக்கும் விதமாகப் பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது.
இந்த மாற்றங்கள், இஸ்லாமிய சமூகத்தின் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்யும் என்றும், நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது என்றும் கல்வியாளர்கள் அஞ்சுகின்றனர். வரலாற்று உண்மைகளை மறைப்பதன் மூலம் அல்லது திரிப்பதன் மூலம், இளம் தலைமுறையினரின் மனதில் பிளவுபடுத்தும் சிந்தனைகளை விதைக்க வழிவகை செய்யப்படுகிறது
கற்பனையான ஹிந்து மன்னர்கள் வரலாறு
‘இஸ்லாமிய வரலாறு’ திரிக்கப்படுவதற்கு இணையாக, சில குறிப்பிட்ட ஹிந்து மன்னர்களின் வரலாறு கற்பனையாகக் கட்டமைக்கப்பட்டு பாடத்திட்டங்களில் சேர்க்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது, “ஹிந்துத்துவா” சித்தாந்தத்தை கல்வி மூலம் திணிக்கும் முயற்சியாகும்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் தங்கள் “பிரித்தாளும் சூழ்ச்சி”க்காக மதத்தின் அடிப்படையில் வரலாற்றை எழுதியது போலவே, தற்போதைய வரலாற்று மாற்றங்களும் ஹிந்துத்துவா நஞ்சை மக்களிடையே திணிக்க பயன்படுத்தப்படுவதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
வரலாறு என்பது ஒரு சமூகத்தின் புரிதலை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பாடத்திட்டங்களில் செய்யப்படும் இத்தகைய மாற்றங்கள், சமூகத்தில் மத வெறுப்பை வளர்க்கும் என்றும், பல்வேறு சமூகங்களுக்கிடையே உள்ள நல்லுறவைப் பாதிக்கும் என்றும் பரவலான கவலைகள் நிலவுகின்றன.
குழப்பமான பள்ளிப்
பாடப் பருவங்கள்
பாடப் பருவங்கள்
தற்போது இந்தியா முழுவதும் முதலாம் வகுப்புமுதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிக்கல்வி ஆகும்.
ஆனால், புதிய பாடத்திட்டத்தின்படி அடித்தளம் (முன்-முதன்மை முதல் 2 ஆம் வகுப்பு வரை), ஆயத்தம் (3-5 வகுப்புகள்), நடுநிலை (6-8), மற்றும் இரண்டாம் நிலை (9-12). என மாற்றம் கொண்டுவரப் பறிந்துரைக்கின்றது
பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCFSE) ஒவ்வொரு நிலையிலும் கற்றல் விளைவுகளையும், திறன்களையும் வகுத்தது. NCERT இந்தக் கட்டமைப்பின் அடிப்படையில் 1-8 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
குழந்தைப் பருவத்தில் பொதுத்தேர்வு – குலக்கல்விக் கொடுமை
இதில் சிக்கல் என்னவென்றால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக்குப் பிற்கு பிறகு பொதுத்தேர்வு, அதன் பிறகு 3,4,5ஆம் வகுப்புகளுக்குப் பிறகும் பொதுத்தேர்வு கொண்டு வரப்படும் திட்டம் உள்ளது. இதன்படி 5 ஆம் வகுப்பிலேயே முழுமையான அரசுத்தேர்வு மாணவர்களிடையே திணிக்கப்படும். இந்தத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு தொழிற்கல்வி என்ற திட்டத்தைக் கொண்டுவர உள்ளனர்.
அதாவது குலக்கல்வி – 5ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் பார்க்கும் தொழிலையே பாடமாகக் கொண்டு பகுதிநேர கல்வி மற்றும் வேலைப்பயிற்சி என்று கொண்டுவரும் திட்டமும் உள்ளது. இதன் ஓர் அங்கமாகத்தான் விஸ்வகர்மா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் தப்பித்து 6 7 8 வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற பிறகு 8 ஆம்வகுப்பில் மீண்டும் ஒரு அரசுத்தேர்வு, அதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு நேரடியாக நிதி உதவி கொடுத்து தொழிற்கல்வியை கற்பதற்கு அனுப்புவது.
இதிலும் தப்பித்து வருபவர்களுக்கு 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு என மூன்று பொதுத்தேர்வுகள் வைத்து அவர்களுக்கு கல்வி என்றாலே வெறுப்பு வரும் ஓர் அங்கமாக மாற்றி அவர்களை கல்வியை விட்டே ஓடவைக்கும் குயுக்திதான் புதிய பாடத்திட்டத்தின் மறைமுகத் திட்டம் ஆகும்.
10ஆம் வகுப்பிற்குப் பிறகு பாடத்திட்டங்களில் பெரும் மாற்றம் செய்ய உள்ளார்கள்.
சமூக அறிவியல், வரலாறு, புவியியல், சூழியல், அரசியல், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை ஒருங்கிணைத்து ஒரே பாடமாகக் கொண்டுவர உள்ளனர்.
வாழ்வியலின் தேவைக்கான பாடத்திட்டத்தினைப் பாதியாக்கி அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக வைத்து 9-12 ஆம் வகுப்புகளுக்கான புதிய புத்தகங்கள் விரைவில் வர உள்ளன.
தேசியக் கல்விக் கொள்கை ஆனது கல்வி கிரெடிட் வங்கி (ABC) மற்றும் தேசிய கிரெடிட் கட்டமைப்பு (NCrF) ஆகியவற்றை முன்மொழிந்துள்ளது
UGC 2021இல் வெளியிட்ட விதிகளின்படி, மாணவர்கள் டிஜிட்டல் முறையில் கிரெடிட்களைப் பெறலாம் மற்றும் சேமிக்கலாம் என்கிறது. அதாவது கல்வி தொடர விரும்பாதவர்கள் கல்வியை கைவிட்டு வேலைக்குச் சென்று பிறகு மீண்டும் படிப்பைத் தொடர உதவுகிறதாம் இந்த கல்வி கிரெடிட் வங்கி (Academic Bank of Credits – ABC).
அமைப்பில் உள்ள ஆபத்துகள்
வெவ்வேறு கல்வி நிறுவனங்கள், வெவ்வேறு கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு அளவுகள் மற்றும் பாடத்திட்டத் தரங்களைக் கொண்டுள்ளன. ஒரு மாணவர் வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து கிரெடிட்களைச் சேகரிக்கும்போது, அந்த கிரெடிட்களின் தரம் மற்றும் உள்ளடக்கத்தின் சீரான தன்மையை உறுதி செய்வது சவாலாக இருக்கும்
தரப்படுத்துதல் இல்லாவிட்டால், சில கிரெடிட்கள் மற்றவற்றை விட தரம் குறைவாக இருக்கக்கூடும், இது ஒரு மாணவரின் ஒட்டுமொத்த கற்றல் தரத்தை பாதிக்கலாம்.
மாணவர்கள் அடிக்கடி படிப்புகளுக்கு இடையில் அல்லது நிறுவனங்களுக்கு இடையில் மாறும்போது, ஒரு குறிப்பிட்ட துறையில் ஆழமான அறிவை வளர்த்துக் கொள்வதற்குத் தேவையான தொடர்ச்சி இல்லாமல் போகலாம்.
ஒவ்வொரு பாடத்திட்டமும் தனித்தனி கிரெடிட்களாகப் பார்க்கப்படும்போது, ஒட்டுமொத்த பாடத்திட்டத்தின் ஒருமைப்பாடு மற்றும் மாணவரின் விரிவான புரிதலில் குறைபாடு ஏற்படலாம்.
கிரெடிட்களை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கும்போது, தொழில்நுட்பச் சிக்கல்கள், தரவுப் பாதுகாப்பு மீறல்கள் அல்லது பதிவுப் பிழைகள் ஏற்படலாம். இது மாணவர்களின் கிரெடிட்களை இழப்பதற்கோ அல்லது தவறான தகவல்கள் பதிவாவதற்கோ வழிவகுக்கலாம்.
வெவ்வேறு நிறுவனங்களின் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது ஒரு பெரிய சவாலாக இருக்கலாம்.
வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட கிரெடிட்களை மதிப்பிடுவது ஒரு சீரான அணுகுமுறையைக் கோருகிறது. ஒரு கிரெடிட் எந்த அளவிற்கு ஒரு மாணவரின் கற்றல் திறனை பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்துவது கடினமாக இருக்கலாம்.
மாணவர் பெற்ற பட்டத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கலாம். எளிதாகப் படிப்புகளில் இருந்து வெளியேறவும் மீண்டும் சேரவும் முடியும் என்ற அம்சம், மாணவர்களிடையே பொறுப்புணர்ச்சியைக் குறைக்கலாம். ஒரு பாடத்திட்டத்தின் சவால்களை எதிர்கொள்ளாமல், கிரெடிட்களைச் சேகரிக்கும் நோக்கத்துடன் மட்டும் படிப்புகளில் ஈடுபட வழிவகுக்கும்.
கிரெடிட்களின் அடிப்படையில் பெறப்படும் பட்டங்கள் அல்லது சான்றிதழ்கள், பாரம்பரிய பட்டங்களைப் போல வேலைவாய்ப்பில் பரவலான அங்கீகாரத்தைப் பெறுவதற்குச் சிறிது காலம் ஆகலாம். நிறுவனங்கள் இத்தகைய கல்விப் பாதைகளின் தரத்தைப் புரிந்துகொள்வதற்கு நேரம் தேவைப்படலாம்.
அனைத்திற்கும் நுழைவுத் தேர்வு
இந்தியா முழுவதுமே தொழிற்கல்வி மற்றும் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வுகளால் குறிப்பாக மருத்துவக் கல்வியில் 2017ஆம் ஆண்டு முதல் பெரும் குழப்பத்துடனே நுழைவுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டு நீட் நுழைவுத்தேர்வு துவங்கும் போதும், முடியும்போதும் ‘நீட்’ மோசடிகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இவ்வாறு மோசடிகள் செய்து மருத்துவர்களாகப் பணியில் சேர்ந்துகொண்டே இருக்கின்றனர். இதனால் மருத்துவக் கல்வித்தரம் கேள்விக்குறியாகி வருகிறது.
அசாம் மாநில மருத்துவத் துறைப் பேராசிரியர் ஒருவர் முதலமைச்சர் ஹேமந்த் குமார் பிஸ்வாவிடம் பொது நிகழ்ச்சியில், “நீட் மூலமாக வந்த மாணவர்களில் பலருக்கு அடிப்படை ஆங்கிலம் மற்றும் சாதாரண கூட்டல் கணக்குகள் கூடத் தெரியவில்லை. முதல் மற்றும் இரண்டாம ஆண்டுகளில் இவ்வாறான மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி போதிப்பதில் அனைத்து பேராசிரியர்களும் பெரும் சவாலைச் சந்திக்கின்றனர்” என்று கருத்தரங்கம் ஒன்றில் பேசியது இந்த ஆண்டு மார்ச் மாதம் செய்தியாக வந்தது. இதுதான் நீட் தேர்வின் அவலம்.
இந்த நிலையில் அனைத்து உயர்கல்விக்கும் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தி விட்டது. துவக்கத்தில் ஒன்றிய அரசின் கீழ் வரும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் க்யூட் என்ற நுழைவுத்தேர்வு வந்துவிட்டது.
கல்லூரி நுழைவுக்கான பொதுத் தேர்வு
2022இல் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) இப்போது இளங்கலை சேர்க்கைகளுக்கான முக்கிய வழியாகும். தேசியக் கல்விக் கொள்கை 2020 பல கல்லூரி நுழைவுத் தேர்வுகளை ஒரு தேசியத் தேர்வால் மாற்றுவதைப் பரிந்துரைத்தது.
2026 முதல், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கும் திட்டங்களைக் கொண்டுள்ளது.
தாய்மொழி விருப்பப் பாடமாம்
ஹிந்தி கட்டாயமாம்
ஹிந்தி கட்டாயமாம்
வகுப்பறைகளில் தாய்மொழி: குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழியை பயிற்று மொழியாகப் பயன்படுத்த தேசியக் கல்விகொள்கை ஊக்குவிக்கிறது என்கிறார்கள்
ஆனால், உண்மை என்னவென்றால் 1முதல் 2 ஆம் வகுப்பு எனப்படும் முதல் நிலையில் மட்டுமே தாய்மொழி3-5 ஆம் வகுப்புகளுக்கு விருப்பமாக பாடமாக மாற்றம் செய்துள்ளது. அதாவது 3 ஆம் வகுப்பு முதல் ஹிந்தி சமஸ்கிருதம் கட்டாயம் தாய்மொழி படிப்பது உஙக்ள் விருப்பம் என்று கூறியுள்ளது.
மும்மொழிக் கொள்கை ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே உள்ளது: தேசிய கல்விக் கொள்கை பள்ளியில் மூன்று மொழிகளை முன்மொழிகிறது, அவற்றில் குறைந்தது இரண்டு இந்திய மொழிகள். ஆனால் தமிழ்-ஆங்கிலம் என்ற மாதிரியைப் பின்பற்றும் தமிழ்நாடு, இதை இந்தியை திணிக்கும் முயற்சி என்று கருதுகிறது.
ஆசிரியர் கல்வி சீர்திருத்தம் நடைபெறவில்லை: 2021 இல் வெளியாக வேண்டிய ஆசிரியர் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட் பாடநெறி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே உள்ள பி.எல்.எட் போன்ற திட்டங்களை வழங்கும் கல்லூரிகள் எதிர்க்கின்றன.
காலை உணவு திட்டம் நிராகரிப்பு
தேசிய கல்விக் கொள்கை மதிய உணவுகளுடன் காலை உணவையும் பரிந்துரைக்கிறது என்று பாஜக தலைவர்கள் மேடையில் முழங்குவார்கள் அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழிசை போன்றவர்கள் தேசியக் கல்விகொள்கையில் காலை உணவுத்திட்டம் உள்ளது. அதன் அடிப்படியில் தான் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது இது தமிழ்நாட்டு அரசின் சிந்தனையில் உதித்தது அல்ல என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால், உண்மை என்னவென்றால் 2021இல், நிர்மலா சீதாராமன் கல்வி அமைச்சகத்தின் காலை உணவுத்திட்டத்தின் முன்மொழிவை நிராகரித்து அதற்கான நிதி ஒதுக்க மறுத்துவிட்டார்.
கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் PM-SHRI பள்ளிகளை அமைப்பதற்காக ஒன்றிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டன,
தமிழ்நாடு மூன்று மொழிக் கொள்கை மற்றும் நான்கு வருட இளங்கலை அமைப்பு இரண்டையும் எதிர்க்கிறது. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் ஓன்றிய அரசு அவர்கள் விருப்பம் போல் திணிக்கும் எந்த ஒரு முடிவையும் மாநிலங்கள் மீது திணிக்க முடியாது என்று கேரளா மற்றும் தமிழ்நாடு வாதிடுகின்றன. இதனால் ஒன்றிய அரசு வஞ்சக எண்ணத்தோடு தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் இந்த மாநிலங்களுக்கு சமாக்ரா சிக்ஷா நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
கருநாடகாவில் எஸ்.ஆர்.பொம்மை தலைமையிலான பாஜக அரசு புதிய கல்விகொள்கையை அமல்படுத்தியது. இந்த நிலையில் அமல்படுத்திய சில மாதத்திலேயே பாஜக படுதோல்வி அடைந்து. காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. புதிய காங்கிரஸ் ஆட்சி சித்தராமையா தலைமையில் தற்போது அங்கு நடந்து வருகிறது. அவர்கள் புதிய கல்விக் கொள்கையில் கீழ் நான்கு ஆண்டு இளங்கலை மாதிரியை ரத்து செய்துவிட்டார்.
2023இல் காங்கிரஸ் கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி கருநாடகா தனக்கென்று சொந்தமாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிக்கொண்டு வருகிறது.