பெய்ஜிங், ஜூலை 31- சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், நாடு முழுவதும் பெற்றோருக்கு மானியம் வழங்கும் திட்டத்தை சீன அரசு அறிவித்துள்ளது. மூன்று பிள்ளைகள் வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஆண்டுதோறும் இந்திய ரூபாய் மதிப்பில் 50,000 வழங்கப்படும் என்று சீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் “ஒரு குழந்தை கொள்கை” திட்டம் அமலில் இருந்தது. தற்போது அந்தத் திட்டம் நீக்கப்பட்ட போதிலும், அந்நாட்டின் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய திட்டத்தால் சுமார் 2 கோடி குடும்பங்கள் பயனடைவர். சீனாவில் சில மாநிலங்கள் ஏற்கனவே அதிகமான பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க மானியங்களை வழங்கியிருக்கின்றன. உதாரணமாக, இந்த ஆண்டு (2025) மார்ச் மாதம் ஹொஹொட் நகரில் குறைந்தது மூன்று பிள்ளைகள் வைத்திருக்கும் தம்பதிகளுக்கு ஒரு குழந்தைக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 15,000 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் பள்ளிக் கல்வியை முற்றிலும் இலவசமாக்குவது குறித்தும் சீன அரசு ஆலோசித்து வருகிறது. பிள்ளைகள் பெற்று வளர்ப்பதற்கு ஆக அதிகச் செலவாகும் நாடுகளில் சீனாவும் ஒன்று என ஓர் ஆய்வு கூறுகிறது.
ஒரு பிள்ளையை 17 வயது வரை வளர்க்க சுமார் இந்திய ரூ மதிப்பில் 55 லட்சம் வரை செலவாவதாக YuWa மக்கள் தொகை ஆராய்ச்சிக் கழகம் நடத்திய அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்ற ஆண்டு (2024) சரிந்தது.
இந்த மானியத் திட்டம் குழந்தை பிறப்பு விகிதத்தைச் சரிக்கட்டுவதில் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.