தொடர்ந்து இந்தியாவை மிரட்டிவரும் டிரம்ப்! ஆகஸ்ட் 1 முதல் இந்தியப் பொருள்களுக்கு 25% வரி!

2 Min Read

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன், ஜூலை 31  ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிலிருந்து அதிக அளவிலான ராணுவத் தளவாடங்கள் மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதற்கும் இந்தியா கூடுதலாக அபராதம் செலுத்த நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருமித்த முடிவு இல்லை

அனைத்து நாடுகளும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்னதாக அமெ ரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் முன்னரே எச்சரித்திருந்தார். இந்தக் காலக்கெடு நெருங்கிய நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு எட்டப்படாததாலேயே இந்த வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப்பின் கடும் விமர்சனம்

டிரம்ப் தனது பதிவில், ‘‘இந்தியா நட்பு நாடுதான் என்றாலும், அந்நாட்டுக்கான அமெரிக்காவின் ஏற்றுமதி பல ஆண்டுகளாகக் குறைவாகவே உள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் அதிக வரியே இதற்கு முக்கிய காரணம். உலகிலேயே மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்கு கிறது. அனைத்து நாடுகளையும் விட கொடுமையான, விரும்பத்தகாத வர்த்தகத் தடைகளைக் கொண்டுள்ள நாடாகவும் திகழ்கிறது’’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகள் குறித்தும் டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “எப்போதுமே ரஷ்யாவிலிருந்து அதிக அளவிலான ராணுவத் தளவாடங்களை இந்தியா வாங்கி வருகிறது; ரஷ்யா கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்கிறது. அனைவரும் உக்ரைன் உட னான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என நினைக்கும்போது, இப்படிச் செய்வது சரியல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு அபராதம்

இந்தக் காரணங்களைக் கூறி, ஆகஸ்ட் முதல் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், ரஷ்யாவுடனான வர்த்தகம் காரணமாகக் கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்தியாவுக்கும் அமெ ரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *