புதுடில்லி, ஜூலை 29- அதிக வெப்பம் காரணமாக மார்ச்-ஜூன் கால கட்டத்தில் நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வெப்பவாத பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதில் 14 பேர் உயிரிழந்ததாகவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
தேசிய நோய்
கட்டுப்பாட்டு மய்யம்
இந்தியாவில் நடப்பு ஆண்டில் கோடை வெயிலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மய்யம் பதில் அளித்து உள்ளது. அதன்படி இந்த ஆண்டு கடந்த மார்ச் 1 முதல் ஜூன் 24 வரையிலான காலகட்டத்தில் அதிக வெப்பம் நிலவியதாகவும், இந்த நாட்களில் 7,192 பேர் வெப்பவாத பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறியுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் குறைவு என கண்டறியப்பட்டு உள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு சுமார் 48 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகி, 159 உயிரிழப்புகள் பதிவாகி இருந்தன.கடந்த 1901-க்குப்பிறகு மிகவும் வெப்பமான ஆண்டாக 2024-ம் ஆண்டு பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் அதிக பாதிப்பு
நடப்பு ஆண்டு ஏற்பட்ட பாதிப்பில் அதிகமான பாதிப்புகள் மே மாதம் அதாவது கோடையின் உச்சக்கட்டத்தில் நிகழ்ந்து உள்ளது. இந்த மாதத்தில் 2,962 பேர் பாதிப்புக்கு உள்ளான நிலையில், 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.ஏப்ரல் மாதம் 2,140 பாதிப்புகளும், 6 உயிரிழப்பும் பதிவாகி உள்ளன. மார்ச் மாதத்தில் 705 பாதிப்புகளும், 2 மரணங்களும் நிகழ்ந்து உள்ளன. ஜூன் மாதத்தில் பாதிப்பு 1,385 ஆகவும், பலி 3 ஆகவும் இருந்தன.
வெப்பவாத பாதிப்பில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர். அந்த மாநிலத்தில் மட்டும் 4,055 பேர் இந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான் (373), ஒடிசா (350), தெலங்கானா (348), மத்தியப் பிரதேசம் (297) மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்கள் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டவர்களை கொண்டிருந்தாலும், உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளன.
வெவ்வேறு கணக்கெடுப்புகள்
அதேநேரம் மராட்டியம், உத்ராகண்ட் மாநிலங்கள் தலா 3 உயிரிழப்புகளுடன் அதிக பலி எண்ணிக்கையை கொண்டுள்ளன. தெலங்கானா, ஒடிசா, ஜார்கண்ட், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்கள் தலா ஒரு உயிரிழப்பை சந்தித்து உள்ளன.
இந்தியாவில் வெயில் தொடர்பான உயிரிழப்புகளை கணக்கிடுவதில் ஒருங்கிணைந்த முறை இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது. வெவ்வேறு அமைப்புகள் வெவ்வேறு வகையான கணக்குகளை வைத்திருக்கின்றன.அந்தவகையில் கடந்த 2015 முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் வெப்பவாதத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மய்யம் 3,812 மரணங்களை கணக்கு வைத்துள்ளது.
இது தேசிய குற்ற ஆவண காப்பகத்திடம் 8,171 ஆகவும், இந்திய வானிலை ஆய்வுத்துறையிடம் 3,436 ஆகவும் இருக்கிறது.எனவே இந்த ஆண்டு பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையிலும் வேறுபாடுகள் இருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.