பாட்னா, ஜூலை 29 பீகாரில் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள புனௌராதாமில், சீதா தேவி பிறந்த இடமாகக் கருதப்படும் ஜான்கிபூர் பகுதியில், பெரிய அளவில் சீதா கோயில் கட்டப்படவுள்ளது. இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8 அன்று அடிக்கல் நாட்டவுள்ளார்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள புனௌரா தாம் ஜான்கிபூர் என்ற இடத்தில், சீதா தேவி பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில், ரூ.882 கோடி செலவில் ஒரு பிரம்மாண்ட சீதா கோயில் கட்டப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுடன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8 ஆம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார்.
புனௌராதாம் ஜானகி மந்திர் வளர்ச்சிக்கு ரூ882.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பீகார் அரசு அறிவித்துள்ளது. இதில் ரூ.137 கோடி பழைய கோயில் வளா கத்தை புனரமைப்பதற்கும், ரூ.728 கோடி கோயிலைச் சுற்றியுள்ள சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மீதமுள்ள ரூ.16 கோடி 10 ஆண்டுகளுக்கு கோயில் வளாகத்தைப் பராமரிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் அயோத்தியில் உள்ள ராம் ஜன்மபூமி போல ஒரு பெரிய மத சுற்றுலா மய்யமாக புனௌரா தாம் மேம்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சீதா-வாடிகா, லவ்-குஷ் வாடிகா, பரிகிரம பாதை, காட்சி, உணவகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள் போன்ற வசதிகள் உருவாக்கப்படும். மேலும், இத்ததளத்திற்கான அனைத்து இணைப்புச் சாலைகளும் மேம்படுத்தப்படும்.
இதன் மூலம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்று பீகார் அரசு கூறியுள்ளது.
அரசியல் கட்சிகள்
குற்றச்சாட்டு
இவ்வாறு பீகார் அரசு தெரிவித்துள்ள நிலையில், பீகாரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களின் வாக்குகளைக் கவருவதற்காகவே மதத்தை முன்வைத்து சீதாதேவி பிறந்த இடம் என்று கூறி, பெரிய அளவில் ‘சீதா கோயில்’ ஜான்கிபூர் பகுதியில் கட்டப்படுகின்றது என பீகார் அரசியல் கட்சிகள் பலவும் குற்றம் சாட்டியுள்ளன.