செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா
மாநாட்டிற்கு தனி வாகனத்தில் திரளாக பங்கேற்போம்
ஒசூர், ஜூலை 28- ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.07.2025 அன்று மாலை 5.30 மணிக்கு தந்தை பெரியார் தோட்டம் முனிஸ்வர் நகரில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்றது.
அனைவரையும் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி வரவேற்றார்.மாவட்ட துணைச் செயலாளர் ச.எழிலன், மாவட்ட மகளிரணி தலைவர் து.சங்கீதா, செயலாளர் அ.கிருபா, மாநகர தலைவர் து.ரமேஷ், மாவட்ட மாணவர் கழக செயலாளர் க.கா.சித்தாந்தன், க.கா.வெற்றி,சுரேஷ், சிவாஜி,தில்லை குமார், பொறியாளர் ரகுவர்மா,ஆகியோர் கருத்துரைக்கு பின் பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.கண்மணி,அசெ.செல்வம் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வளர்ந்து வரும் ஒசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொது இடங்களில் அரசு அனுமதியின்றி வழிப்பாட்டு தளங்கள் அமைப்போர் மீதும்,அமைத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து பொது இடத்தை மாநகராட்சி நிர்வாகம் மீட்க வேண்டும் என்றும், ஒசூர் உள் வட்ட சாலையில் உள்ள முனிஸ்வர் நகர் தோரண வாயில் அமைக்க கடந்த 09.07.2025 சட்டமன்ற உறுப்பினர்,மேயர்,மாமன்ற உறுப்பினர் ஆகியோரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அந்த தோரண வாயில் பகுதிக்கு அறிஞர் அண்ணா நினைவு தோரண வாயில் முனிஸ்வர்நகர் என்று பெயர் வைத்திட மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டு கொள்ளுவதுடன், முனிஸ்வர் நகர் உட்பகுதியில் சுமார் ஏழாயிரம் குடும்பங்கள் பல்வேறு மொழி மதம் சார்ந்தவர்கள் வசித்து வரும் நிலையில், அமையவுள்ள முனிஸ்வர் தோரண வாயில் கட்டட அமைப்பில் எந்தவிதமான மதம் சார்ந்த சிலைகள் அமைக்க ஒசூர் மாநகராட்சி அனுமதி வழங்கக் கூடாது.அப்படி அனுமதிப்பது மதசார்பற்ற தன்மைக்கும் திராவிட மாடல் அரசுக்கு உகந்ததாக இருக்காது என்று தமிழ்நாடு அரசுக்கும்,ஒசூர் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தி கொள்ளப்படுகிறது.
எதிர் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி செங்கல்பட்டில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநட்டில் ஒசூரில் இருந்து தனி வாகனத்தில் திராளாக பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.