வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது ஆதார் ஆவணத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஏடிஆர் அமைப்பு மனு தாக்கல்

2 Min Read

புதுடில்லி, ஜூலை 28-  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது ஆதார் ஆவணத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏடிஆர் தன்னார்வத் தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தேர்தல்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில்பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.

இதன்படி கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்று, பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை ஆவணமாக ஏற்கப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

11 மனுக்கள்

இந்த சூழலில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பில் 11 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “நாடு முழுவதும் போலி ரேசன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. ஆதார், வாக்காளர் அட்டைகள் நம்பத்தகுந்த ஆவணங்களாக இல்லை. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு பிறப்புச் சான்று, கடவுச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டது.

பதில் மனு: மனுதாரரான ஏடிஆர் தன்னார்வ நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:

மோசடி வழியில் ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டைகளை பெற முடியும். எனவே வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிக்கு அவற்றை ஆவணங்களாக ஏற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

11 ஆவணங்கள்

பிறப்புச் சான்றிதழ், பாஸ் போர்ட், கல்விச் சான்றிதழ், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை அல்லது ஆணைகள், நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டு ஒதுக்கீட்டுச் சான்றிதழ், 1967-க்கு முன்பு பல்வேறு பொது அதிகாரிகளால் வழங்கப்பட்ட பிற ஆவணங்கள் ஆகிய 11 ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த ஆவணங்களையும் மோசடியாக தயாரிக்க வாய்ப்பு இருக்கிறது. நாடு முழுவதும் நிரந்தர குடியிருப்பு சான்று. ஓபிசி/எஸ்சி/எஸ்டி சான்று, பாஸ்போர்ட் ஆகியவற்றை பெற ஆதார் அட்டை ஓர் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது.

ஆனால் ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுவது அபத்தமானது. இன்றைய சூழலில் அனைத்து அரசு சேவைகளுக்கும் ஆதார் அவசியமான ஆவணமாக மாறியிருக்கிறது.

எனவே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜனநாயக உரிமைகள், மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *