பாட்னா, ஜூலை 27 காவலர் பணிச்சேர்க்கைக்கான முகாமில் காவலர் பணிக்குச் சேரச்சென்ற பெண், மயங்கி விழுந்தபோது அவரை ஆம்புலன்ஸில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டப்பயிற்சியில் மயக்கம்
பீகாரின் கயா மாவட்டத்தில் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்ற 26 வயது பெண் ஒருவர், உடல் பரிசோதனையின்போது மயங்கி விழுந்துள்ளார். காவல்துறையினரின் ஆட்சேர்ப்புக்கான பயிற்சியின் போது ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட பெண் மயக்கமடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், தான் மயக்கமடைந்திருந்த போது, ஆம்புலன்ஸுக்குள் பல நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்தப் பெண் தற்போது குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கையைத் தொடர்ந்து, புத்தகயா காவல் நிலையத்தில் எப்.அய்.ஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, ஒரு சிறப்பு விசாரணைக் குழுவும், தடயவியல் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் ஆண் செவிலியர் அஜித் குமார் என அடையாளம் காணப்பட்ட, இரண்டு சந்தேக நபர்களை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. தற்போது இருவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பெண் மயங்கிய இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள், வாகனத்தின் பாதை மற்றும் அது பயணித்த நேரத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
பாதிக்கப்பட்ட பெண் புகார்
காவல்துறையில் அளிக்கப்பட் டுள்ள புகாரின்படி, உடல் பரிசோதனையின் போது தான் சுயநினைவை இழந்ததாகவும், போக்குவரத்தின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து ஓரளவு மட்டுமே அறிந்திருந்ததாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். பின்னர், ஆம்புலன்சில் இருந்த மூன்று முதல் நான்கு ஆண்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, காவல்துறை மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு அந்த பெண் தெரிவித்தார்.
மாநில சட்டம் – ஒழுங்கை விமர்சித்த எம்.பி சிராக் பாஸ்வான்
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள லோக் ஜனசக்தி கட்சித்(ராம் விலாஸ்) தலைவரும், ஒன்றிய அமைச்சருமான சிராக் பாஸ்வான், பீகாரில் சட்டம் ஒழுங்கு நிலைமையை விமர் சித்துள்ளதோடு, மாநில காவல் துறையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குற்றங்கள் கட்டுப்பாடற்றதாகிவிட்ட ஒரு அரசாங்கத்தை ஆதரிப்பது வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித் துள்ளார்.