பீகாரைப் பார்த்த பிறகு தமிழ்நாட்டை பாருங்கள்!

4 Min Read

தமிழ்நாட்டின் ஆட்சிமீது வீண்பழி சுமத்தும் பொய்யர்கள் சற்று பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரைப் பார்க்க வேண்டும்.

பீகாரில் குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஜூலை 4ஆம் தேதி பாட்னா தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு கைதி வியாழக்கிழமை (ஜூலை 17) காலை கொலை செய்யப்பட்டார்.

பாட்னா நகரில் மட்டும், ஜூலை 4 முதல் ஜூலை 17 வரை மணல் வியாபாரி ஒருவர், ஒரு பள்ளி நடத்துநர் மற்றும் ஒரு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மிகார் ‘குற்றங்களின் தலைநகராக’ மாறி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பாட்னாவின் பராஸ் மருத்துவமனையில், கொலைக்குப் பிறகு குற்றவாளிகள் மிகவும் நிதானமாக தப்பிச் சென்றனர்

பாட்னாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான பராஸ் மருத்துவமனையின் அறை எண் 209இல், 17.7.2025 அன்று காலை 7.15 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

அய்ந்து பேர் துப்பாக்கிகளை காட்டிக் கொண்டு இந்த அறைக்குள் நுழைந்து, சந்தன் மிஸ்ரா என்ற நபரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, மிகவும் சாதாரணமாக நடந்து சென்றனர்.

சந்தன், பீகாரில் உள்ள பக்ஸரைச் சேர்ந்தவர். மருத்துவமனையின் சிசிடிவி-இல் பதிவான காட்சிகளில், அந்த நபர்கள் முகமூடி அணியவில்லை என்பது தெரிகிறது. அவர்கள் அறைக்கு வெளியே நின்று, இடுப்பிலிருந்து கைத்துப்பாக்கிகளை எடுத்து, பின்னர் அறைக்குள் நுழைந்து சுட்டுவிட்டு, எந்தவித அவசரமோ பதற்றமோ இல்லாமல் வெளியேறுகிறார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு பேசிய பாட்னா காவல்துறை எஸ்எஸ்பி கார்த்திகேய சர்மா, “சந்தன் மிஸ்ரா, தண்டனை பெற்ற ஒரு கைதி. அவர் பரோலில் வெளியே வந்தவர். பக்ஸரில் நடந்த கும்பல் சண்டை அல்லது தனிப்பட்ட பகை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய  குற்றவாளிகளை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்’’ என்றார்.

ஜூலை 4 முதல் ஜூலை 17 வரையிலான காலகட்டத்தைப் பற்றிப் பேசினால், தொழிலதிபர் கோபால் கெம்கா, மணல் வியாபாரி ராமகாந்த், வழக்குரைஞர் ஜிதேந்திர மஹதோ, பள்ளி நடத்துநர் அஜித் குமார் ஆகியோர் தலைநகர் பாட்னாவில் கொலை செய்யப்பட்டனர்.

உள்ளூர் செய்திகளின்படி, 15 நாட்களில் திகார் மாநிலத்தில் குறைந்தது 50 கொலைகள் நடந்துள்ளன.

இதற்கிடையில், மாநிலத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து கூடுதல் காவல் துறை இயக்குநர் (ஏடிஜி தலைமையகம்) குந்தன் கிருஷ்ணன் கூறிய கருத்து எவ்வளவுப் பொறுப்பற்றது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை 16 அன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கொலைகள் நடந்து வருகின்றன. மழை பெய்யாத வரை, விவசாயிகளுக்கு வேலை இல்லாததால் கொலைகள் தொடர்கின்றன. மழைக்குப் பிறகு, விவசாயிகள் பரபரப்பாகி விடுகிறார்கள். ஊடகங்கள் இந்தக் கொலைகள் குறித்து தொடர் விவாதங்களை நடத்துகின்றன, மறுபுறம் இந்த காலத்தில் தேர்தல்களும் உள்ளன.” என்று கூறினார். குந்தன் கிருஷ்ணனின் கருத்து ‘கண்டிக்கத்தக்கது’ என்றும், பீகாரின் சட்டம் –ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவது மிகவும் கவலைக்குரியது என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துவரும் சிராக் பாஸ்வானே தெரிவித்துள்ளார்.

இதே பீகாரில் 2021 அக்டோபர் 3ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தின்போது பிஜேபி அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா என்பவர் ஒரு பெரிய வாகனத்தை விவசாயிகள்மீது மோதச் செய்து உயிர்களைப் பறிக்கவில்லையா?

இதற்கிடையில், எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி   “சட்டம்– ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. குற்றங்கள் பருவத்திற்கு ஏற்ப நடக்கும் என்று கூறியுள்ள பீகார் காவல்துறையினர் விடுப்பு எடுக்க வேண்டும்,” என்றார்.

இவை அனைத்திற்கும் மத்தியில், புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2006 மற்றும் 2022க்கு இடையில் பீகார் மாநிலத்தில் 53,057 கொலைகள் நடந்துள்ளன என்று 2022இல் வெளியிடப்பட்ட தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி சில நாட்களுக்கு முன்பு வரை பீகாரின் குற்றச் செயல்கள் குறித்த குறிப்புகளை வெளியிட்டு வந்தார். நிதிஷ் குமாரின் இருபது ஆண்டுகால ஆட்சியில் 60 ஆயிரம் கொலைகளும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகளும் நடந்துள்ளது மேலும் மாநிலத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்று கூறியுள்ளார்.

இவ்வளவையும் எடுத்துக்காட்டுவதற்கு முக்கிய காரணம் ஏதோ தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது போன்று ‘கோரஸ்’ பாடும் பிஜேபி அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் பார்ப்பன ஊடகங்களுக்கும் உணர்த்தத்தான்!

இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாடு எல்லா வகையிலும் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் சிறந்தோங்கி விளங்குகிறது என்பதுதான்  சுவர் எழுத்தாகும்!

பீகாரில் ஆட்சியில் இருப்பது பிஜேபி, அய்க்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி ஆட்சிதான் என்பதை மறந்து விடக்கூடாது!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *