முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆக. 16ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்

2 Min Read

சென்னை, ஜூலை 24- ரூ.37 கோடி மொத்த பரிசுத்தொகையுடன் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ஆக 16ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

விளையாட்டுப் போட்டி

பள்ளி, கல்லூரி மாணவ. மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், அரசுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2024ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு ரூ.83.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டன.

இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட, மண்டல அளவில் வரும் ஆக.22 முதல் அக்.12-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. மாவட்ட அளவில் 25 வகையான போட்டிகள், மண்டல அளவில் 7 வகையான போட்டிகள், மாநில அளவில் 37 வகையான போட்டிகள் என மொத்தம் ரூ.83.37 கோடியில் நடத்தப்படவுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ரூ.37 கோடி பரிசு

தனி நபர் போட்டி களில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம், குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.37 கோடி பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் https://cmtrophy.sdat.in/cmtrophy அல்லது https://sdat.tn.gov.in/ என்ற இணையதளங்கள் வாயிலாக முன்பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம். முன்பதிவானது ஆக.16-ம் தேதியுடன் நிறைவடையும். கூடுதல் விவரங்களை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *