தர்மஸ்தலா கோயிலில் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு : கருநாடக அரசு அறிவிப்பு!

1 Min Read

பெங்களூரு, ஜூலை 23 கருநாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது எஸ்.அய்.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என கருநாடக அரசு அறிவித்துள்ளது.

தர்மஸ்தலா கோயிலில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றும் 52 வயதுடைய ஒருவர் அளித்த புகாரின் பேரில், தர்மஸ்தலா காவல்துறையினர் கோயில் நிர்வாகத்தின் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, பெங்களூரைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 2003ஆம் ஆண்டு தர்மஸ்தலா கோயிலுக்குச் சென்ற தனது 22 வயது மகள் திடீரெனக் காணாமல் போனதாகவும், இதுகுறித்து காவல்துறையினர் புகார் அளித்தபோது தன்னைத் தாக்கி சித்ரவதை செய்ததாகவும் குறிப்பிட்டு, தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து வழக்குரைஞர் வேலன் கருநாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். பலரும் இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

கருநாடக அரசின் நடவடிக்கை

இதையடுத்து கருநாடக அரசு, “தர்மஸ்தலா பாலியல் கொலை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு  (SIT) விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. காவல்துறை தலைமை இயக்குநர் பிரணாப் மொகந்தி தலைமையிலான குழுவினர் வழக்கு குறித்து விசாரித்து, விரைவில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள்” எனத் தெரிவித்துள்ளது. இந்த எஸ்.அய்.டி, விசாரணை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *