அ. குமரேசன்
(மேனாள் பொறுப்பாசிரியர், ‘தீக்கதிர்’)
கதை சொல்வதில் கூட அறிவியல் இருக்க முடியுமா? அறிவியல் என்றால் என்னவென்று அறிந்தவர்களுக்குத் தெரியும், கலை–இலக்கியம் உள்படப் பேரண்ட வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் அது இருக்கிறது என்பது. பிரிட்டிஷ் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வில் ஸ்டார் எழுதிய ‘தி சயின்ஸ் ஆஃப் ஸ்டோரிடெல்லிங்’ (கதை சொல்லலின் அறிவியல்) புத்தகம் இந்தப் புரிதலை மேலும் ஆழமாக்கியது. அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்த ரத்தினக் கற்களை கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) மாலையில்தான் இணையவழியில் பகிர்ந்துகொண்டேன். பட்டை தீட்டப்பட்டுப் பல வண்ணங்களில் ஒளிரும் ரத்தினங்களை ஞாயிறன்று நேரில் கண்டேன். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படிப்போம் இரு அமைப்புகளும் இணைந்து சென்னையில் நடத்திய ‘வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை’ அந்த ரத்தினங்களைப் பரப்பி வைத்தது.
அங்கே ஏற்பட்ட முதன்மையான உணர்வை முதலில் வெளிப்படுத்தியாக வேண்டும். எத்தனையோ இடங்களுக்குப் போய் வருகிறோம் என்றாலும் “நம்ம இடம்” என்ற உணர்வு சில இடங்களில்தான் ஏற்படும். என்னைப் பொறுத்தவரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், ‘தீக்கதிர்’ வளாகம், பாரதி புத்தகாலயம், சில நெருக்கமான நண்பர்களின் இல்லம் போல ‘நம்ம இடம்’ என்ற அதே உணர்வு ஏற்பட்ட இடம்தான் பெரியார் திடல். அங்கேதான் பட்டறை நடத்தப்பட்டது. மருத்துவக் காரணங்களுக்காக வீட்டில் முடங்க நேர்ந்த எனக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் பெரியார் திடலுக்கு வந்தது அந்த உணர்வை முன்னுக்குக் கொண்டு வந்தது. கருத்தியல் ஒருமைப்பாட்டில் தோள் சேரும் தோழர்களின் அன்பான வரவேற்பும் அக்கறையான விசாரிப்பும் அந்த உணர்வை ஆழப்படுத்தின.
மனம் குறித்துக்கொண்ட மற்றொரு காட்சி – எழுத்தாக்கப் பட்டறையில் பங்கேற்ற பல்கலைக்க ழகங்கள், கல்லூரிகளின் மாணவர்கள் தமிழ், இலக்கியம் மட்டுமல்லாமல் அறிவியல், வணிகவியல், வரலாறு என பல துறைகளைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள்.
அய்ஸ்கிரீம்
விருந்து முடிகிறபோது வழங்கப்படும் அய்ஸ்கிரீம் போல, பங்கேற்பாளர்களுக்குக் கருத்து விருந்தோடு, ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ சிறார் நாவலுக்காக இவ்வாண் டின் பாலசாகித்ய புரஸ்கார் விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணன் பாராட்டு நிகழ்வு கூடுதலாகக் கிடைத்தது. ஒரு மாறுபாடு – பட்டறைத் தலைப்புகளில் விருந்து தொடங்குவதற்கு முன்பே இந்த அய்ஸ்கிரீம் வழங்கப்பட்டது.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றப் பொதுச் செயலாளர் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். பட்டறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் செங்கொடி விருதாளரின் படைப்புகள் குறித்துப் பேசினார்.
வாழ்த்துரை வழங்கியவர் திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி. அரசியலும் சமூகமும் போலவே சிறார் இலக்கியம் குறித்தும் இவருக்கு இத்தனை முதிர்ச்சியான பார்வையா என்று வியக்க வைத்தார். “சரவணனின் படைப்புகளில் குழந்தைகளை ஈர்த்துக் கும்மாளமிடச் செய்யும் சுவையான நிகழ்ச்சிகள் இருக்கின்றன, ஆனால் ஒரு கதையில் கூட மூடநம்பிக்கைக் கருத்துகள் இல்லை,” என்று குறிப்பாகச் சொல்லிப் பாராட்டினார். பிஞ்சுகளைக் கொஞ்சுகிறபோது நாமும் மழலையர்களாக மாறிடும் அற்புதத்தை அவர் விவரித்த நொடிகளில், எல்லோரும் தங்கள் மடியில் ஒரு குழந்தை அமர்ந்திருப்பதாக உணர்ந்திருப்பார்கள்.
கவனிப்பின் முக்கியத்துவம்
பட்டறையின் முதல் அனுபவமாக விஷ்ணுபுரம் சரவணன் வழங்கிய ‘அனுபவங்களைக் கதையாக்கும் கலை’ பற்றிய உரை வந்தது. ஆதிக்க ஜாதியினரின் வன்முறைக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இலக்காகிய பின்னணியில், தாக்கப்பட்ட கிராமம், தாக்கிய கிராமம் இரண்டையும் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்குப் போக முடியாத நிலைமையை எடுத்துரைத்தார். குழந்தைகளின் படிப்பு வாய்ப்பு தடைப்படுவது எப்பேர்ப்பட்ட சோகம்! இது போன்ற அனுபவங்களை உள்வாங்குகிறபோது கதைக் கருக்கள் கிடைத்துவிடும். வளரும் எழுத்தாளர்கள் சமுதாயத்தில் நடக்கும் கருத்தியல் போராட்டங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அப்போது நீங்கள் அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக மாறுகிறீர்களோ இல்லையோ, அதற்கு எதிராகப் போக மாட்டீர்கள்,” என்று அவர் முடித்தது ஆயிரம் விருதுகளுக்குத் தகுதியான கருத்து.
“வாய்ப்புகளுக்காகக் காத்திருங்கள்” எனக் கூற வந்தார் தேவிலிங்கம். ஒரு பெண் என்ற முறையில் தனது எழுத்து முயற்சிகளுக்கு விடுக்கப்பட்ட சவால்களைப் பகிர்ந்துகொண்டார். “பெண்களின் பாதையில் அப்படிப்பட்ட தடைக் கட்டைகள் எப்போதுமே போடப்படுகின்றன. அவற்றைத் தாண்டி ‘நான் வந்துவிட்டேன் பார்’ என்று காட்டுவதற்கு எழுத்தாக்கம் பெருந்துணையாகும்” என்று தன் வெற்றிக்காகக் காத்திருந்ததை நினைவுகூர்ந்தார்.
அத்தியாயங்களின் அத்தியாயம்
“ஒரு அத்தியாயம் எவ்வாறு உருவாகிறது?” தனது படைப்புப் பயண அத்தியாயங்களின் மூலம் இந்த வினாவுக்கு விடையளித்த தமிழன் பிரபாகரன், “இரும்புப் பெண்மணி என்றவுடன் பொதுவாக நமக்குக் குறிப்பிட்ட சில தலைவர்களின் உருவங்கள்தான் உடனடியாக நினைவுக்கு வரும். என் நினைவுக்கு வருபவர், தற்செயலான ஒரு சந்திப்பில் தன் வாழ்வில் நேர்ந்த பெரும் இழப்புகளைப் பற்றிப் பேசிய ஒரு மூதாட்டிதான். அந்த இழப்புகளால் தோளில் ஏற்றப்பட்ட கடுமையான சுமைகளைச் சுமந்த அந்தப் பாட்டிதான் எனக்கு இரும்புப் பெண்மணியாகத் தோன்றுகிறார். எதிர்காலத்தில் இரும்புப் பெண்மணி ஒருவரை மய்யமாக வைத்துக் கதை எழுதுகிறபோது அந்தப் பாட்டிதான் மய்யப் பாத்திரமாவார். யாருடனும் பேசுவதும், அவர்கள் பேசுவதைக் கேட்பதும் படைப்புக்கான ஓர் அனுபவ அடிப்படை,” என்றார். பங்கேற்றவர்களுக்கு, நாம் இப்படி அறிமுகமில்லாதவர்களோடு பேசியிருக்கிறோமா, அவர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறோமா என்று சிந்திப்பதற்கான அத்தியாயத்தை எழுதினார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா. நேரு, ‘சிறுகதை படைப்பும் வாசிப்பும்’ பற்றிய தன் சிந்தனைகளைப் பகிர்ந்தார். “மேற்குலகிலிருந்து வந்த சிறுகதை இலக்கியம் இங்கே தழைத்து வளர்ந்திருக்கிறது. பல வகையான கதைகளும் எழுதப்படுகின்றன. அவற்றில் வெற்றி பெறும் படைப்புகளுக்கு அடித்தளமாக இருப்பவை அறிவியல் பார்வையும் மனிதநேயமும்தான்” என்று உறுதிபடக் கூறினார்.
எழுதுவது இருக்கட்டும், படிப்பதற்குக் கூட நேரமில்லையே என்று புத்தக வாசனையை முகராதவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த நழுவலைப் பகடி செய்தார், “ஆமாம், நேரமில்லை தான்” என்ற தலைப்பில் உரையாற்றிய அய்ன்ஸ்டீன் பொறியியல் கல்லூரித் தலைவர் ஆலடி எழில்வாணன். நல்ல எழுத்தாளராக வேண்டுமானால் நிறைய வாசிக்கிறவர்களாக இருந்தாக வேண்டும் என்றார். “தமிழ்நாட்டைக் கட்டமைத்த பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தங்களின் கடுமையான பல பணிகளுக்கிடையே எழுத்தாளர்களாகவும் இருந்ததால்தான் இன்றும் நிலைத்திருக்கிறார்கள். எழுத்தின் மீதான ஈடுபாட்டிற்குக் கால வரம்பே கிடையாது” என்று வாசிக்கவும் எழுதவுமான நேரத்தைப் பிடித்துவைத்துக்கொள்வதன் தேவையை வலியுறுத்தினார்.
அதுவோர் ஒழுக்கம்
“எதை, எப்படி, யாருக்காக எழுதுவது?” – இந்தத் தலைப்பில் உரையாக வழங்கி உரையாடலாகவும் மாற்றிய கவிஞர் மனுஷ்யபுத்திரன் முற்போக்காளர்களுக்கு இதில் குழப்பமே இல்லை என்று நிறுவினார். பங்கேற்பாளர்களுடன் உரையாடுவதற்கு இதழியல் சார்ந்த செய்தியாக்கத்தை ஊடகமாக்கிக்கொண்ட அவர், “இன்றைய விளம்பரப் படங்களில் காட்டப்படும் குறுங்கதைக்கும் குறிப்பிட்ட தயாரிப்புப் பொருளுக்கும் நேரடித் தொடர்பு இருக்காது. அது தெரியாமல் செய்வதல்ல, திட்டமிட்டே பார்வையாளர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துப் பிறகு விற்பனைப் பொருளை முன்வைக்கிற நுட்பமான உத்தி இருக்கிறது. ஈடுபாட்டோடு இத்தகைய குறுங்கதைகளை உருவாக்கக் கூடியவர்களுக்கு விரிவான வாய்ப்பு வெளி இருக்கிறது,” என்றார். அவர் பகிர்ந்துகொண்ட மறக்கவியலாத, கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சீரிய சிந்தனை: “எழுத்து எங்கும் வியாபித்திருக்கிறது. எழுத்து ஓர் ஒழுக்கம்.”
செயற்கை நுண்ணறிவு
மருத்துவம், மளிகை என எங்கும் எதிலும் இன்று செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எழுத்துலகம் மட்டும் அதைப் பிடித்துக்கொள்ளாமல் விட்டுவிட முடியுமா? “செயற்கை நுண்ணறிவும் படைப்புலகமும்” பற்றிப் பேச வந்தார் திரைப்படக் கணினியியல் துறை சார்ந்த அய்எஸ்ஆர் வென்ச்சர்ஸ் குழுமத்தின் நிறுவனர் செல்வகுமார். ஏஅய் வகைப்பாடுகள் பற்றி சுருக்கமாகத் தெரிவித்தவர், நிறுவனத்தின் இளம் குழுவினரோடு சேர்ந்து, ஏஅய் உதவியால் உருவாக்கிய உதவியாளரையும் சேர்த்துக் கொண்டு அந்த உலகத்திற்கான மாதிரிகளை அங்கேயே படைத்துக் காட்டினார். அறிவியல் கண்ணோட்டம் உள்ளவர்கள் தங்களுடனும் உரையாட இந்த ஏ.அய். உதவியாளர்களை அழைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
20க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் மாணவர்கள், ஆர்வலர்கள் என 150 பேர் கலந்துகொண்டு உரைகளை உள்வாங்கினார்கள். நிறைவுரையாற்றிய திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், “தமிழ் மக்களின் எழுத்துத் தொன்மைக்குச் சான்றாக கீழடி எழுத்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன” என்றார். அவ்வாறு கூறியதன் மூலம் சமூக மாற்றத்திற்கான எழுத்தாக்கத்தில் ஒரு நியாயமான வரலாற்றுப் பெருமையை அடையாளப்படுத்தினார். நிறைவாக, திராவிடர் கழகப் பொருளாளர் கறுப்புச் சட்டை குமரேசன் தலைமையில், பயிற்சியாளர்களுக்குப் பங்கேற்ற ஆளுமைகள் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
நேர ஒழுங்கு
முன்னதாக ‘வாருங்கள் படிப்போம்’ குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்க, இசைஞர் லோ.குமரன், நன்றி நவிலலுடன் பட்டறை நிறைவடைந்தது. புதிய புரிதல்களுடனும் படைப்பு வேட்கையுடனும் எல்லோரும் கைகுலுக்கிக்கொண்டார்கள்.
பட்டறை வெற்றியில் ஒரு மய்யமான பங்கு நேர ஒழுங்கு. திட்டமிட்ட நேர அளவில் ஒவ்வொரு நிகழ்வும் கச்சிதமாகக் கொண்டு செல்லப்பட்டது. “இந்த காலத்தில் நாள் முழுக்க உட்கார்ந்து பயிற்சிப் பட்டறைகளில் யார் கலந்து கொள்வார்கள்” என்று கேட்கக்கூடியவர்கள் இருப்பார்கள். அவர்களுக்குப் பதில் சொன்னார்கள், பல ஊர்களிலிருந்தும் புறப்பட்டு, காலை 8 மணியிலிருந்தே திடலுக்குள் வரத் தொடங்கி, 9 மணிக்குக் குறிப்பேடுகளுடன் தயாராக அமர்ந்துவிட்ட பங்கேற்பாளர்கள். ஆகவே அறிவிக்கப்பட்டபடி 9.30 மணிக்கு நிகழ்வைத் தொடங்கினார் எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவரும் ‘வாருங்கள் படிப்போம்’ குழு நிறுவனருமான பதிப்பாளர், எழுத்தாளர் முனைவர் கோ. ஒளிவண்ணன். ஒவ்வொரு மாணவரையும் தன் வீட்டுப் பிள்ளை போல அவர் அணுகியதும், கேள்விகள் கேட்டோருக்குப் பரிசாகப் புத்தகங்களை வழங்கியதும் நிகழ்வின் கூடுதல் சிறப்பு.
‘‘எத்தனையோ இடங்களுக்குப் போய் வருகிறோம் என்றாலும் “நம்ம இடம்” என்ற உணர்வு சில இடங்களில்தான் ஏற்படும். என்னைப் பொறுத்தவரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், ‘தீக்கதிர்’ வளாகம், பாரதி புத்தகாலயம், சில நெருக்கமான நண்பர்களின் இல்லம் போல ‘நம்ம இடம்’ என்ற அதே உணர்வு ஏற்பட்ட இடம்தான் பெரியார் திடல். அங்கேதான் பட்டறை நடத்தப்பட்டது. மருத்துவக் காரணங்களுக்காக வீட்டில் முடங்க நேர்ந்த எனக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் பெரியார் திடலுக்கு வந்தது அந்த உணர்வை முன்னுக்குக் கொண்டு வந்தது. கருத்தியல் ஒருமைப்பாட்டில் தோள் சேரும் தோழர்களின் அன்பான வரவேற்பும் அக்கறையான விசாரிப்பும் அந்த உணர்வை ஆழப்படுத்தின.’’
உணவு இடை வேளையில், திடலின் அருங்காட்சி யகத்தையும், நினைவுச் சின்னங்களையும் பார்க்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்தது. குறித்தபடி மாலை 5 மணிக்குப் பட்டறை நிறைவடைந்தது. விடைபெற்றவர்களின் முகங்களில் புதிய நட்புகள் கிடைத்த மலர்ச்சியும் ஒளிர்ந்தது. தமிழ் எழுத்துலகின் எதிர்காலத் தலைமுறைகளோடு அணி சேரவிருப்போர் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்திய முகாமாக அமைந்தது. அந்த வெற்றிக்குக் காரணமான பகுத்தறிவு எழுத்தாளர் மன்றப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களது அர்ப்பணிப்பு மிக்க பணிகளும், மாணவர்களை அனுப்பி வைத்த ஆசிரியர்களது உற்சாக ஊக்கமும் என்றென்றும் நினைவுகூரத் தக்கவை.