துணைக் குடியரசு தலைவர் பதவி விலகல் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை

3 Min Read

புதுடில்லி, ஜூலை 23- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், ஜெகதீப் தன்கரின் பதவி விலகல் பல்வேறு விவாதங்களை கிளம்பியுள்ளது. பதவி விலகல் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்த விவகாரத்தில் அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது.

அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

துணை குடியரசுத்தலைவர் தனது உடல்நிலையை காரணமாக கூறி பதவி விலகல் செய்துள்ளார். அது உண்மையாக இருந்தால் மதிக்கப்பட வேண்டும். ஆனால் அவர் கட்டாயத்தின்பேரில் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவே கருதுகிறோம்.

நேற்று முன்தினம் (21.7.2025) காலையில் மாநிலங்களவை அலுவல் ஆய்வுகூட்டத்தை மக்களவைதலைவராக இருந்த துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் நடத்தினார். அப்போது ஒன்றிய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பின்னர் மீண்டும் மாலை 4.30 மணிக்கு அலுவல் ஆய்வுக்கூட்டத்தை அவர் கூட்டினார். அந்த கூட்டத்தை ஒன்றிய அமைச்சர்கள் புறக்கணித்தனர். எனவே மதியம் 1 மணியில் இருந்து மாலை 4.30 மணிக்குள் ஏதோ நடந்து இருக்கிறது. அதுதான் ஜெகதீப் தன்கரை பதவி விலகல் வரை கொண்டு சென்றுள்ளதாக நாங்கள் நினைக்கிறோம் அந்த மர்மம் என்ன என்று கேட்கிறோம்.

விளக்க வேண்டும்

துணை குடியரசுத்தலைவரின் பதவி விலகல் எந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். அவரது மவுனம் இன்னும் பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. ஜெகதீப் தன்கர் பூரண குணம் அடைய வாழ்த்திய பிரதமர், அவர் ஏன் பதவி விலகல் செய்தார் என்பதை கூறவேண்டும். இவ்வாறு அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கே.சி.வேணுகோபால்

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பொதுச் செயலாளரான கே.சி.வேணு கோபால் கூறுகையில், துணை குடியரசுத்தலைவரின் பதவி விலகலுக்கான காரணத்தை ஒன்றிய அரசு கட்டாயம் விளக்க வேண்டும் என்றார்.

விவேக் தங்கா

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. விவேக் தங்கா கூறுகையில், துணை குடியரசுத்தலைவரின் பதவி விலகல் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. நேற்று முன்தினம் மாநிலங்களவை கூட்டத்தில் அவர் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தார். வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்தை அவர் கையாண்ட விதம் அவரை பதவி விலகல் செய்ய வைத்துவிட்டதா?

நேற்று முன்தினம் அவர் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தார். இருப்பினும், மதியம் ஏதோ நடந்தது. அவர் அழைத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்துக்கு ஒன்றிய அமைச்சர்கள் வராதது, தன்னை அவமானப்படுத்தியதாக அவர் உணர்ந்திருக்கலாம் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்டு நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ்குமார் கூறுகையில், துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கரின் பதவி விலகல் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது பதவி விலகலுக்கு உடல்நிலையை தாண்டி வேறு காரணங்கள் இருக்கலாம். அது பற்றி பிரதமர் மோடியும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவும் விளக்க வேண்டும் என்றார்.

சமாஜ்வாடி

சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம்கோபால் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம்

ஜெகதீப் தன்கரின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித் துள்ள ராஷ்டிரிய ஜனதாதளம், இது நிதிஷ்குமாருக்கு எதிரான பா.ஜனதாவின் சதி என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த கட்சி யின் சட்டமன்ற கொறடா அக்தருல் இஸ்லாம் ஷாஹின் கூறுகை யில், பீகார் சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட் பாளர் என்ற நிலையில் இருந்து நிதிஷ்குமாரை அகற்றிவிட்டு தாங்களே முதலமைச்சர் பதவியை பெற பா.ஜனதா விரும்புகிறது. இதற்காக நிதிஷ்குமாரை துணை குடியரசுத்தலைவராக்க திரைமறைவில் திட்டமிடப் பட்டுள்ளது. பா.ஜனதாவின் இந்த சதி ஒருபோதும் எடுபடாது. பீகார் ‘தேர்தலில் தேசிய  ஜனநாயக கூட்டணி நிச்சயம் தோல்வி அடையும் என்றார்.

நட்டா மறுப்பு

காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டுகளை பா.ஜனதா தேசிய தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டா, திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “அலுவல் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க முடியாததற்கான காரணத்தை முன்கூட்டியே மாநிலங்களவை தலைவருக்கு (ஜெகதீப் தன்கருக்கு) தெரிவித்து விட்டோம். உடல்நிலையை கருத்தில் கொண்டே அவர் பதவி விலகல் செய்துள்ளார்” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *