மணிலா, ஜூலை 23- பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்க்கும் அடைமழை காரணமாகத் தலைநகர் மணிலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீப்பா புயல் நாட்டை நெருங்கியதால் மழை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தப் பெருமழையால் சுமார் 48,000க்கும் மேற்பட்ட மக்கள் அவசரமாகத் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.
இதுவரை குறைந்தது மூவர் உயிரிழந் துள்ளதாகவும், இருவரைக் காணவில்லை என்றும் பிலிப்பைன்ஸின் பேரிடர் நிர்வாக நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாகத் தலைநகர் மணிலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பள்ளிகளும், அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. மீட்புப் பணியாளர்கள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
மணிலாவில் உள்ள மரினிகா ஆற்றின் நீர்மட்டம் 18 மீட்டரை எட்டியுள்ளதாக மீட்புப்பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வெள்ளம் காரணமாக சுமார் 23,000க்கும் மேற்பட்ட மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், குவேசோன் (Quezon) மற்றும் கலோகான் (Caloocan) நகரங்களிலிருந்து 25,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கலோகான் நகரில், ஒரு மூதாட்டியும் அவரோடு சென்ற ஒரு இளைஞரும் பாலத்தைக் கடக்கமுயன்றபோது, ஆற்றில் ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களின் வண்டி மீட்கப்பட்டாலும், அவர்கள் இருவரையும் இதுவரை காணவில்லை. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மீட்புப் பணிகள் சவாலாக உள்ளதாகவும், காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.