மும்பை, ஜூலை 22- மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. பயணிகள் உயிர் தப்பினர்.
ஓடுபாதையில் இருந்து விலகல்
மும்பையில் நேற்று (21.7.2025) பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் கொச்சியில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த நேரத்தில் விமான நிலைய பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி நின்றது. இந்த விபத்து காரணமாக விமானத்தில் சக்கரங்களின் டயர்கள் வெடித்தன. விமானத்தின் என்ஜின் பகுதி சேதமடைந்தது. என்ஜின் பகுதிக்குள் சகதியும் சென்றது.
அதே நேரத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் காரணமாக சம்பந்தப்பட்ட ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது. மாற்று ஒடுபாதையில் விமானங்கள் இயக்கப்பட்டன.
ஏர் இந்தியா அறிக்கை
இதுகுறித்து ஏர் இந்தியா செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கொச்சியில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட விமானம் தரையிறங்கிய போது பலத்த மழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகியது. விமானம் பாதுகாப்பாக கேட் வரை இழுத்து செல்லப்பட்டது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்து பத்திரமாக இறக்கப்பட்டனர். விமானம் சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.