சியோல், ஜூலை 22- தென் கொரியாவில் கடந்த அய்ந்து நாட்களாகப் பெய்துவரும் இடைவிடாத கனமழைக்கு 14 பேர் பலியானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (ஜூலை 21, 2025) பெய்த மழையால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அய்ந்து பேரைக் காணவில்லை என்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக் கலாம் என அஞ்சப்படுகிறது.
தென் கொரியத் தலைநகர் சியோலில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியோங்கி (Gyeonggi) மாவட்டத்தில் கிட்டத் தட்ட 170 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இருப்பினும், கியோங்கி மாவட்டத்தில் உள்ள சான்சியோங் (Sancheong) நகரில் மிக அதிக அளவாக 800 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் சான்சியோங் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, தென் கொரியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் பருவமழை பெய்வது வழக்கம். இதற்காக நாடு வழக்கமாகத் தயாராக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு நாட்டின் தெற்கு மாவட்டங்களில் எதிர்பார்க்காத அளவில் மழை பெய்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளின் தீவிரத்தை எடுத்துக்காட்டுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.