மும்பை, ஜூலை 22- இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கூட மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய் சிகிச்சைக்கான மருந்துகளின் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதய நோய்க்கான மருந்துகள்
விற்பனை அதிகரிப்பு
கொலஸ்ட்ரால், செரிமானக் குழாயில் சிக்கல், தொற்று அல்லது சர்க்கரை நோய்களுக்கான மருந்துகளின் விற்பனையை விட, இதய நோய் சிகிச்சைக்கான மருந்துகளின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. ‘பார்மாரேக்’ என்ற நிறுவனம் இந்தியாவில் மருந்து விற்பனை குறித்து நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. நாட்டின் பிரபலமான 17 பார்மா நிறுவனங்கள் விற்பனை செய்த மருந்துகளின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தபோது,
கடந்த 2021 ஜூன் மாதம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான மருந்துகள் ரூ.1,761 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 2025ஆம் ஆண்டில் ரூ.2,645 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த புள்ளிவிவரத்தின்படி, இதயம் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்கான மருந்துகளின் விற்பனை ஆண்டுதோறும் சராசரியாக 10.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
விழிப்புணர்வு
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், “மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பது, உயர் ரத்த அழுத்தத்தை அளவிடுவதில் புதிய அளவுகோல்கள் போன்றவை இதய நோய் சிகிச்சைக்கான மருந்துகளின் விற்பனை அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளன.
இதய நோய் அதிகரித்து வருவது உண்மைதான். அதேநேரத்தில், இதய நோயைக் கண்டறியும் அதிநவீன கருவிகள் வருகை, இதய நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் போன்றவை மேம்பட்டுள்ளன” என்றனர்.
ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஏற்படும் 63 சதவீத உயிரிழப்புகள் எளிதில் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. அதில் 27 சதவீதம் பேர் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் இறக்கின்றனர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் இந்திய மக்கள் மத்தியில் இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மேலும் வலியுறுத்துகின்றன.