மதவெறிப் பேச்சாளர் மதுரை ஆதீனம் காவல்துறை நேரில் விசாரணை

Viduthalai

மதுரை, ஜூலை 22-  உளுந்தூர்பேட்டை கார் விபத்து விவகாரத்தில் மதுரை ஆதீனத்திடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் மதுரையில் விசாரணை நடத்தினர்.

கடந்த 2021இல் மதுரை ஆதீனத்தின் 293ஆவது ஆதீனமாக ஞானசம்பந்த தேசிக இருந்து வருகிறார். மே 2ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த சித்தாந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் சென்றபோது, உளுந்தூர்பேட்டை பகுதியில் சாலையில் மற்றொரு கார், தனது கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி தன்னை சிலர் கொலை செய்ய முயன்றதாக குற்றச் சாட்டினார். குறிப்பாக ‘தொப்பி, தாடி வைத்தவர்கள் என, தன் புகாரில் கூறி இருந்தார்.

விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்

விபத்து குறித்த சிசிடிவி காட்சியை காவல்துறை தரப்பு வெளியிட்டு தவறான தகவல்களை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக அறிக்கை வெளியிட்டனர். தவறான தகவல் பரப்பி, மதமோதலை தூண்டும் வகையில் பேசிய ஆதீனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதியக் கோரி சென்னை அயனாவரம் வழக்குரைஞர் ராஜேந்திரன் அளித்த புகாரில் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் துறையினர், மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் முன்பிணை கோரி மதுரை ஆதீனம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். “அவருக்கு 60 வயதுக்கு மேல் இருப்பதால் அவர் நேரில் ஆஜராக கட்டாயமில்லை. காவல் துறை நேரில் சென்று விசாரிக்கலாம், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல்துறையினர் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே தெற்கு ஆவணி மூல வீதியிலுள்ள ஆதின மடத்திற்கு நேரில் சென்றனர். சைபர் கிரைம் ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான 3 காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

40-க்கும் மேற்பட்ட கேள்விகளை அவரிடம் கேட்டு, அதற்கான பதில்களை பதிவு செய்தனர். அவரது வழக்குரைஞர்களும் ஆதின மடத்துக்குள் பெண் காவல் ஆய்வாளர் முதன் முறையாக விசாரணைக்கு வந்ததால் மதுரை விளக்குத்தூண் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் மடத்திற்கு வந்தனர்.

மாநகர பாஜக மாவட்ட தலைவர் மாரிசக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் அங்கு சென்றிருந்தனர். ஒரு கட்டத்தில் விசாரணைக்கு இடையூறு கருதி யாரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *