சென்னை, ஜூலை 22- நடப்பாண்டில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைந்துள்ளதாக ஒன்றிய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள பிஎஸ்பி மருத்துவக் கல்லூரியில் இந்த இடக் குறைப்பு நிகழ்ந்துள்ளது.
கடந்த ஆண்டு பிஎஸ்பி மருத்துவக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் இது 100 இடங் களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றாததே இந்த நடவடிக்கைக்கான காரணமாக இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 250 எம்பிபிஎஸ் இடங்களாக அதிகரிக்கக் கோரி கல்லூரி விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, தற்போது இருக்கும் இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், பிஎஸ்பி மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்துமாறு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
எம்சிசி வெளியிட்ட அறிவிக்கையின்படி, நாடு முழுவதும் 766 மருத்துவக் கல்லூரிகளில் 1,15,900 எம்பிபிஎஸ் இடங்கள் நடப்பாண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே சமயம், ஆந்திரம், சத்தீஸ்கர், டில்லி, குஜராத், கருநாடகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், மதுரை எய்ம்ஸ், கோவை இஎஸ்அய் மருத்துவக் கல்லூரி என மொத்தம் 77 கல்லூரிகளுக்கான எம்பிபிஎஸ் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 12,000 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
பிஎஸ்பி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட இடக் குறைப்பைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள மற்ற 76 மருத்துவக் கல்லூரிகளிலும் கடந்த ஆண்டில் இருந்த அதே எண்ணிக்கையிலான இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.