மதுரை, ஜூலை 22- விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தனி சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக இத்தகைய சட்டம் கொண்டு வரப்படுவதற்காக தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
பயிற்சி ஆசிரியரின் பாலியல் சீண்டல்
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பயிற்சி ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ஆசிரியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிபதியின் பரிந்துரை
இந்த வழக்கின் தீர்ப்பின்போது, நீதிபதி, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவிகளின் பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தார். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஹசன் முகமது ஜின்னா வாதிடுகையில், “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவியர் மற்றும் பெண்கள் நலன் கருதி பல்வேறு விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளைப் பள்ளிக் கல்வித் துறையும், விளையாட்டு மேம்பாட்டுத் துறையும் பின்பற்ற வேண்டும் என அரசாணை பிறப்பித்துள்ளது” என்றார்.
சிறப்புச் சட்டம்
மேலும் அவர், “தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து காவல்துறை, கல்வித் துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலாளர்கள் விரிவாக ஆய்வு நடத்தி, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவிகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சிறப்பு சட்டம்’ இயற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டம் வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, “நாட்டில் முதன்முறையாக, தமிழ்நாட்டில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவிகள் மற்றும் பெண்கள் நலன் கருதி இதுபோன்ற சட்டம் கொண்டு வர முயற்சிக்கும் தமிழ்நாடு அரசை நீதிமன்றம் பாராட்டுகிறது. சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைத்தார்.
தென்பெண்ணையில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உத்தரவு
கிருஷ்ணகிரி, ஜூலை 22- தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க கருநாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்பெண்ணை நதியைத் தொடர்ந்து மாசுபடுத்தி, ஆறு செல்லும் தூரம் நெடுகிலும் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துவதாக நீர்வளத்துறை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது. அத்தோடு ஆற்றில் மாசு அளவை ஆய்வு செய்து அறிக்கையை தமிழ்நாடு நீர்வளத்துறையினர் தெற்கு மண்டல பசுமை தீர்ப்பாய அமர்வில் சமர்ப்பித்தனர்.
பெங்களூரு பெல்லந்தூர், அகரா, வர்தூர் ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் மாசுபட்ட நீர், நுரை, துர்நாற்றத்துடன் கெலவரப்பள்ளி அணைக்கு வந்து நிறைகிறது. இதனால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் கருப்பு நிற நீரில் நுரையும், துர்நாற்றமும் வீசுகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்பையும், சுகாதாரக் கேடுகளையும் ஏற்படுத்துவதாக நீர்வளத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.
இவற்றை ஆய்வு செய்த தீர்ப்பாயம் கருநாடகா மற்றும் தமிழ்நாட்டில் கழிவுநீர் கலக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டு கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் மாசுபட்டு கருப்பு நிறத்தில் துர்நாற்றத்து டன் வெள்ளை நுரையாக வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க கருநாடக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கருநாடக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 21இல் நடைபெற உள்ளது என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அமர்வு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 29ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க கருநாடக, தமிழ்நாடு அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓசூர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து போராடி வரும் நிலையில் வந்துள்ள இந்த தீர்ப்பு குறிப்பிடத்தக்கது.