ஓடாவா, ஜூலை 20- கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஆஸ்வையோஸ் எல்லைச் சாவடியில் கனடிய அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில், அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு கனடா நாட்டவரின் டிரக்கிலிருந்து 70 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இது கனடிய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தக் கடத்தல் சம்பவம், கனடாவிலிருந்து போதைப் பொருட்கள் அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி வந்த குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கனடாவிலிருந்து போதைப்பொருள் அமெரிக்காவுக்கு வருவதாகக் கூறித்தான் கனடா மீது வரி விதிப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அமெரிக்காவிலிருந்துதான் கனடாவிற்கு போதைப்பொருள் வருகிறது என்பதற்கான சான்று கிடைத்துள்ளதாக கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட டிரக் ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அய்சிஎஃபில் வேலைவாய்ப்பு
1,010 பணியிடங்கள் காலி
அய்டிஅய், 8ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!
சென்னை, ஜூலை 20- சென்னை பெரம்பூரில் உள்ள அய்சிஎப் (ICF) ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனமான ரயில்வேக்கு சொந்தமான அய்சிஎஃபில், 1,010 அப்ரண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அய்டிஅய், 10ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்கள்:
சென்னை பெரம்பூரில் அய்சிஎப் (ICF) எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலை உள்ளது. ரயில்வேக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில், ரயில் பெட்டி தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் ஒன்றாக உள்ளது.
பொதுத்துறை நிறுவனமான அய்சிஎப்பில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அய்சிஎப் தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் விவரம்;
தச்சர், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர் உள்ளிட பிரிவுகளில் பயிற்சி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அய்டிஅய் முடித்தவர்கள், 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கான பயிற்சி பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 1,010 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
பணிக்கு புதியவர்கள் (ஃபிரஷர்) கேட்டகிரியில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அய்டிஅய் கேட்டகிரியில் விண்ணப்பிப்பவர்கள் துறை சார்ந்த பிரிவில் அய்டிஅய் முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் பார்த்து தேர்வர்கள் உறுதி செய்து கொள்ளலாம்
வயது வரம்பு:
அய்டிஅய் விண்ணப்பதாரர்கள் 15 வயது நிரம்பியிருக்க வேண்டும். 24 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். அய்டிஅய் அல்லாத பணியிடங்களுக்கு 15 வயது நிரம்பியவர்களும் 22 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,610 கனஅடியாக உயர்வு
மேட்டூர், ஜூலை 20- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,880 கனஅடியில் இருந்து 18,610 கனஅடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.48 அடி; மேட்டூர் அணையின் நீர் இருப்பு 92.64 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடி நீர் வெளியேற்றம். மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.