சென்னை, ஜூலை 19- மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அடுத்த ஓராண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப் பள்ளியில், 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைந்துள்ளது. படிப்படியாக உற்பத்தி குறைந்து நாளொன்றுக்கு 30மில்லியன் லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த ஆலையில் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதால் மீண்டும் இந்த ஆலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இதன் ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் இந்த ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதன் சாத்தியக்கூறுகள் மற்றும் மறு சீரமைப்பு பணிகள் தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் அமைச்சர் நேரு ஆலோசனை நடத்தினார்.
நடவடிக்கை
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஒப்பந்ததாரரின் அலட்சியம் காரணமாக ஆலை தற்போது பயன்பாடின்றி கிடப்பதாகவும், ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை பிடித்தம் செய்து ஊழியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் இந்த ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று ஆலை பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆலை அடுத்த ஓராண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது சென்னை மாநகருக்கு 2021இல் நாளொன்றிற்கு 900 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
சென்னை மாநகருக்கு எந்த பாதிப்புமின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்ய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.