சென்னை, ஜூலை.18– நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக தேர்த லின் போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டதாக சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
ரூ.4 கோடி பறிமுதல்
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நெல்லை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரான மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான விடுதியில் பணிபுரியும் 3 பேர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்து சென்ற ரூ.4 கோடியை தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர், தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி ஹவாலா தரகர் சூரஜ் என்பவரை கைது செய்தனர். இந்தநிலையில் சூரஜ், பிணை கோரி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
பணப்பட்டுவாடா
இந்த மனுவை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார். மனு மீதான விசாரணையின் போது, ‘பா.ஜனதா நிர்வாகி கோவர்தன் தங்கக் கட்டிகளுக்கு பதிலாக ரூ.97.92 லட்சத்தை ஹவாலா தரகர் சூரஜுக்கு கைமாற்றி உள்ளார்.
பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம்,பா.ஜனதா நிர்வாகி கோவர்தன் ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்ய முயற்சி மேற்கொண்டு உள்ளனர். இந்த தகவல் அலைபேசி அழைப்புகளை சேகரித்தல் (கால் டேட்டா ரெக்கார்டு) மூலம் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது’ என சி.பி.சி.அய்.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிபந்தனை ஜாமீன்
மனுவை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர் சூரஜுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார். மேலும், நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் சி.பி.சி.அய்.டி. காவல்துறையில் மனுதாரர் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.