‘‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற ஒரு திட்டத்தை நமது சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தி, செயல்பாட்டிலும் இறங்கி விட்டார்.
‘‘காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.’’ (குறள் – 386)
எளிதில் காணக் கூடியவனாகவும், கடுஞ் சொல் பேசாமல் இருக்கும் அரசனை மக்கள் உயர்வாகப் பேசுவார்கள் என்பது இதன் பொருள்.
இது நூற்றுக்கு நூறு நமது ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் துல்லியமாகப் பொருந்தக் கூடியதாகும்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் இதற்கு எடுத்துக்காட்டாகும். மன்னன் என்ற இடத்தில் இங்கு முதல் அமைச்சரைச் சுட்டுவதாகும்.
மக்கள் நேரில் வந்து பார்ப்பதற்குப் பதிலாக மக்களாட்சியில் முதலமைச்சரே மக்களைச் சந்திப்பது என்பது மக்கள் நல அரசு என்பதற்குத் தலை சான்ற எடுத்துக்காட்டாகும்.
முதலமைச்சர் ஆன பிறகுதான் என்று இல்லை, அதற்கு முன்னதாக மக்களை நேருக்கு நேர் சந்தித்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியவரும் இவரே!
முதலமைச்சர் ஆன நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, எளிதாக, மக்கள் பிரதிநிதிகள் நமது முதலமைச்சரைச் சந்திப்பது என்பது எளிதாகவே இருக்கிறது.
ஏழை – எளிய மக்கள் வாழும்பகுதிகளுக்குச் செல்லுவது, பள்ளிகளில் காலைச் சிற்றுண்டியின் போது, அவர்களோடெல்லாம் அமர்ந்து உண்பது என்பது எல்லாம் – மக்களோடு மக்களாக சங்கமித்து வாழும் வகைசூடும் முதலமைச்சராக நடந்து காட்டுகிறார்.
‘‘முதல்வர் தனிப் பிரிவில் (‘சிஎம் செல்’) பெறப்படும் மனுக்கள், அவரது பயணத்தின்போது மக்கள் தரும் மனுக்கள், அழைப்பு மய்யத்தில் பெறப்படும் கோரிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தீர்வு காணும் நோக்கில் ‘முதல்வரின் முகவரி துறை’ கடந்த 2021 நவம்பரில் தொடங்கப்பட்டது.
அதன்கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டு, கடந்த ஜூன் 30 வரை 1.01 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 2023-இல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் நகர பகுதிகளில் 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன.
இதன் அடுத்த கட்டமாக தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் நகர்ப்புறத்தில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகள் மூலமாக 46 சேவைகளும் வழங்கப்படும். இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4 கவுன்ட்டர்கள், இதர துறைகளுக்கு 13 கவுன்ட்டர்கள், இ-சேவை, ஆதார் அட்டை மாற்றத்துக்கு 2 கவுன்ட்டர்கள் உள்ளன. இ-சேவை மய்யங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முகாம்களில் அந்த சேவையை பெற ரூ.30 கட்டணமாக செலுத்தினால் போதும்.
ஜூலை 15-ம் தேதி தொடங்கி வாரம்தோறும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் முகாம் நடைபெறும். இதுபோல நவம்பர் வரை தொடர்ச்சியாக 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் இடம், நாட்கள் விவரம் இதில் உள்ளது. மக்கள் தங்கள் பகுதிகளில் எப்போது முகாம் நடைபெறுகிறது என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்’’.
மக்கள் தங்கள் குறைபாடுகளை, பிரச்சினைகளை மனுக்கள் மூலம் நேரில் அளிப்பது அல்லது அனுப்பி வைப்பது – அதற்கான தீர்வு 45 நாட்களுக்குள் என்பன எல்லாம், இதுவரை யாரும் நினைத்துப் பார்க்க முடியாதவை.
திராவிட இயக்கம் என்பதே – அதுவும் தந்தை பெரியார் வழிகாட்டிய முறை என்பது, நாள்தோறும் மக்கள் மத்தியில் கருத்துரையாற்றுவது, கூட்டங்களுக்குமுன் தங்கும் இடத்தில் வரும் கழகக் குடும்பத்தினரைச் சந்தித்துக் கலந்துறவாடுவது, இயக்கத்துக்கு அப்பாற்பட்டு பொதுக் காரியங்கள் குறித்து வருகின்றவர்களைச் சந்தித்து, பரிகாரங்கள் செய்வது என்பன எல்லாம் அன்றாட நடைமுறையாகும்.
‘மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு’’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தந்தை பெரியார்பற்றி பாடிய வரிகள் கற்பனையானவையல்ல – நேரில் கண்ட காட்சிகளாகும்.
அந்த வழி வந்த திராவிட இயக்கத்தின் தொடர்ச்சிதான் நமது முதலமைச்சர் பின்பற்றி வரும் அணுகுமுறையாகும்.
தேர்தலின் போது மட்டும் வாக்கு சேகரிக்க மக்களிடம் வருவது – அதோடு, அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு வரும் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்திப்பது என்பன எல்லாம் மக்களாட்சி முறைக்கு உகந்ததல்ல!
அதே போல இயற்கைப் பேரிடர் நிகழும் போதெல்லாம் அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ சில நிவாரணப் பணிகளை செய்வது என்பது – நமது முதலமைச்சரின் அணுகுமுறையல்ல; நேரிடையாகவே களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதை மக்கள் அறிவார்கள்.
நமது தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த போதுகூட கடும் வெள்ளத்தில் மக்கள் தத்தளித்தபோது எல்லாம், அரை உடம்பு வரை வெள்ளம் சூழ்ந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் மக்கள் பணியாற்றியவர்தான் இன்றைய முதலமைச்சர்.
சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பதற்கு ஒரு முதலமைச்சரிடம் அனுமதி பெற ஓர் இரவு முழுவதும் காத்திருக்க வேண்டியிருந்த கடந்த காலத்தையும், அந்தத் தாமதத்தால் ஏரி உடைப்பெடுத்து, மக்கள் வாழும் பகுதி எல்லாம் தண்ணீர்க் கடலாகி உயிர் இழந்த மக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை.
ஒப்பிட்டுப் பாருங்கள்!
இப்பொழுது நாட்டில் நடப்பது மக்கள் நல ஆட்சி (Welfare State). இதன் விரிவாக்கம். A Welfare State is a form of Govt. in which the state plays a key role in the protection of the economic and social well being of its citizens. இதன் பொருள் ஓர் அரசு, அதன் குடிமக்களின் பொரு ளாதாரமும், சமூகநலனும் பாதுகாக்கும் செயல்படும் நிர்வாக முறை. இதற்கு இலக்கணம்தான் இன்றைய ‘திராவிட மாடல்’ அரசாகும்.
மீண்டும் உதயசூரியன் உதிப்பது உறுதி