நியூயார்க், ஜூலை 15- நியூயார்க்கில் உள்ள சோத்பைஸ் ஏல நிறுவனம், செவ்வாய்க் கோளைச் சேர்ந்த மிகப்பெரிய விண்கல்லான NWA 16788 ஜூலை 16, 2025 அன்று ஏலத்தில் விடவுள்ளது. 25 கிலோகிராம் எடை கொண்ட இந்த விண்கல், 2023ஆம் ஆண்டு நைஜரின் சஹாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது பூமியில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய செவ்வாய்க் கோள் விண்கல் ஆகும்,
பூமியில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்கற்கள் பதிவாகியுள்ள நிலையில், வெறும் 400 மட்டுமே செவ்வாய்க் கிரகத்தைச் சேர்ந்தவை. NWA 16788, செவ்வாய்க் கிரகத்தில் சிறுகோள் மோதியதால் விண்வெளியில் தூக்கி எறியப்பட்டு, 225 மில்லியன் கிலோமீட்டர் 22.5 கோடி கிலோமீட்டர் தொலைவு பயணித்து பூமியில் விழுந்ததாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதன் மேற்பரப்பில் உள்ள கண்ணாடி போன்ற புழுதி, பூமியின் வளிமண்டலத்தில் உராய்வால் உருவானது எனக் கருதப்படுகிறது.
இந்த விண்கல், olivine-micro gabbroic shergottite வகையைச் சேர்ந்தது, இது செவ்வாயில் எரிமலை லாவாவிலிருந்து உருவானது என்பதை விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இத்தகைய விண்கற்கள் சூரிய மண்டலத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ள முக்கிய தடயங்களை வழங்குகின்றன. இதற்கு முன் இத்தாலிய விண்வெளி மையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த விண்கல், தற்போது (4 மில்லியன் டாலர்) ரூ.33.6 கோடி வரை விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏலம், அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விண்கல் தனியார் கைகளுக்கு செல்வதா அல்லது ஆய்வுக்காக பொது நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்த விவாதங்களையும் எழுப்பியுள்ளது.