சென்னை, ஜூலை 14- மருத்துவத் துறையில் இந்தியாவின் மற்ற மாநிலங் களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவர் தினத்தையொட்டி மருத்துவர் தின விழா- ஆளுநர் ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மருத்துவ ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மருத்து வத் துறையில் சிறந்து விளங்கும் 50 ஆளுமைகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
மருத்துவர்களை ஒவ்வொரு நாளும் போற்றி வாழ்த்த வேண்டும். ஏனென்றால் சமூகத்தில் நிகழும் துயரமான தருணங்களில் நம் நினைவுக்கு முதலில் வருவது மருத்துவர்கள்தான்.
நாம் கார்கில் போரில் இழந்த வீரர்களின் எண்ணிக்கையைவிட கரோனா காலத்தில் இழந்த மருத்துவர்களின் எண்ணிக்கையே அதிகம். இது மரணத்தையும் மீறிய மகத்தான தியாகமாகும். பாடப் புத்தகங்களில் ஆசிரியர்களை போல, மருத்துவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மருத்துவத் துறையில் இந்தியாவின் மற்ற மாநிலங் களுக்கு முன் மாதிரியாக தமிழ்நாடு உள்ளது. உலகம் முழுவதும் இருந்து சிகிச் சைக்காக நோயாளிகள் தமிழ்நாட்டிற்கு வருவது பெருமைக்குரிய விஷயம். 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்றால், அதை சாத்தியமாக்க மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
மக்களின் உடல் நலமே நாட்டின் வளர்ச்சிக்கும் தூணாக இருக்கும். அந்த வகையில் நலமுள்ள இந்தியாவை உருவாக்குவதில் மருத்துவர்கள் பங்கு பெரியளவில் உள்ளது.
மருத்துவர்களின் அறிவுரைகள் பள்ளிகளுக்கும் இளைஞர்களுக்கும் பொது மக்களுக்கும் மீண்டும் மீண்டும் பகிரப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.