ஊற்றங்கரை, ஜூலை 14- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் கடந்த 28.6.2025 அன்று மாலை 5 மணிக்கு வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு, முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், திராவிட இயக்கத் தீரர்களின் படத்திறப்பு நடைபெற்றது.
ஊற்றங்கரை நகரின் மூத்த திராவிட இயக்க வீரருக்கு பாராட்டு உள்ளிட்ட அய்ந்து நிகழ்வுகளை உள்ளடக்கி “அய்ம்பெரும் விழா”வாக வெகு எழுச்சியுடனும் நடைபெற்றது.
ஊற்றங்கரை பேரூராட்சித் தலைவர் பா.அமானுல்லா தலைமையேற்க, ரஜினி செல்வம், எக்கூர் த.செல்வம், எஸ்.குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
நூல் வெளியீடு
‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொகுத்த “குடிஅரசு – ஒரு முத்துக் குளியல்” எனும் நூல் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
நூல் குறித்து கழக மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம் அறிமுக உரையாற்றினார். கிருட்டினகிரி திமுக மாவட்ட பொருளாளர் பா. கதிரவன் நூலை வெளியிட மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் மருத்துவர் எஸ்.மாலதி 10 நூல்களை ரூ 5000 நன்கொடை அளித்து பெற்றுக் கொண்டார்.
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் வெளியிட மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.கே நரசிம்மன், வே.கிருட்டினமூர்த்தி, எம்.சந்திரன், குண.வசந்தரசு, வே.செந்தில், சி.காந்தி, பேரூராட்சி துணைத் தலைவர் உ.கலைமகள், சு.தணிகைகுமரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் வே.குபேந்திரன், சா.அசோகன் உள்ளிட்ட பலரும் நூல்களை பெற்றுக் கொண்டனர்.
படத்திறப்பு
ஊற்றங்கரை பகுதியில் திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்து மறைந்த திராவிடர் கழகம் – திராவிட முன்னேற்ற கழகம் சார்ந்த முன்னணி பொறுப்பாளர்களின் படங்களை “திராவிட இயக்க தீரர்கள்” என்கிற அடிப்படையில் கிருட்டினகிரி மாவட்ட திமுக மருத்துவரணித் தலைவர் மருத்து வர் கை.கந்தசாமி திறந்துவைத்து உரையாற்றினார். ஊற்றங்கரை விடு தலை வாசகர் வட்ட பணிகளை பாராட்டியும், திராவிட இயக்க மூத்த உறுப்பினர் கே.ஆர் கிருஷ்ண னின் பணிகளை பாராட்டியும், மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் சிறப்புரையாற்றினார்.
திராவிடர் கழக மாவட்ட செயலாளர் செ.பொன்முடி தொகுத்து வழங்க ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா.அப்பாசாமி ஒருங்கிணைத்தார். செ.சிவராசன் நன்றியுரையாற்றினார்.