கடலூர், ஜூலை 13– சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
வீராணம் ஏரி
சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது. இதில் வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது. இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக திகழ்கிறது.
இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். முழு கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரியில் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி, திருமுட்டம் வட்டப்பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது.
சென்னைக்கு குடிநீர்
சென்னைக்கு நாள்தோறும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், மீண்டும் ஜூன் மாதம் 4ஆம் தேதி 2ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
இதற்கிடையே வீராணம் ஏரியில் இருந்து சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ்.மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதாலும், சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்ததாலும் ஏரியின் மொத்த நீர்மட்டத்தில் இருந்து 45.25 அடியாக நீர்மட்டம் குறைந்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ ணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 1,800 கன அடி தண்ணீர் திறந்து விட்டனர். இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயரத் தொடங் கியது. இந்த நிலையில் நேற்று (12.7.2025) வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. நடப்பாண்டில் 3ஆவது முறையாக வீராணம் ஏரி முழுகொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் நேற்றைய நிலவரப்படி கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,100 கனஅடி தண்ணீர் வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வழக்கம்போல் வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.