பஞ்சாயத்து கூட்டத்தில் ரூ.85 ஆயிரத்துக்கு
நொறுக்குத்தீனி சாப்பிட்ட அரசு அதிகாரிகள்
நொறுக்குத்தீனி சாப்பிட்ட அரசு அதிகாரிகள்
போபால், ஜூலை 13– அலுவலகங்களில் நடக்கும் கூட்டங்களில் ஆடம்பரமாக செலவிடுவது ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருக்கத்தான் செய்கிறது. மக்களின் வரி பணம்தானே செலவு செய்கிறோம் என்ற அலட்சிய எண்ணத்துடன் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் செய்தி அவ்வப்போது வருகிறது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் செலவிடப்பட்டுள்ள கணக்கு பட்டியல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேசம், பாத்வாகி கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் உள்பட அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் 30 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களுக்கு நொறுக்குத்தீனிகள், பழங்கள் ஆகியவை பரிமாறப்பட்டது. கூட்டத்தில் ரூ.85 ஆயிரத்துக்கு சாப்பிட்டதற்காக கணக்கு பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 கிலோ முந்திரி, 3 கிலோ உலர் திராட்சைகள், 3 கிலோ பாதம் கொட்டைகள், 9 கிலோ ஆப்பிள், ஆரஞ்சு, திராட்டை பழங்கள், 5 டஜன் வாழைப்பழம், 30 கிலோவுக்கு மிக்சர், பூந்தி, இனிப்பு வகைகள் முதலியவற்றுக்கு கணக்கு எழுதப்பட்டுள்ளது.
ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கணக்குப் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பேசுபொருளாகி உள்ளது.
குற்றங்களின் தலைநகராக பீகார்
மோடி, அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ்
பாட்னா, ஜூலை 13– பீகாரில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு கூறியதாவது:-
முதலமைச்சர் நிதிஷ் குமாரால் பீகார் மாநில நிர்வாகத்தை கட்டுப்படுத்தவில்லை. பிரதமர் மோடி, அமித் ஷா ஆகிய இருவரால் இங்கே நிர்வாகம் நடத்தப்படுகிறது. இதனால் இந்தியாவின் குற்றங்களில் தலைநகராக பீகார் மாறிவருவதற்கு இருவரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஆதார் கார்டு, ரேசன் கார்டு ஆகியவை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆவணங்கள் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. வாக்காளர்கள் பட்டியல் தீவிர திருத்தப் பணியை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேர்தல் ஆணையம் சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வீதியில் இறங்கி போராடுவோம். இவ்வாறு கிருஷ்ணா அல்லவாரு தெரிவித்துள்ளார்.