திருச்சி, ஜூலை 12– இந்திய தேசிய மாணவர்படை (NCC) விமானப் பிரிவில் (Air Wing) பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விமானப்படை சார்ந்த திறமைகள் மற்றும் அறிவுத்திறனை மய்யமாகக் கொண்டு நடத்தப்படும் அய்.ஏ.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி முகாம், தஞ்சாவூர் வல்லம் – பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இம்மாதம், 02.07.2025 முதல் 11.07.2025ஆம் தேதி வரை, தேசிய மாணவர் படையின், திருச்சிராப்பள்ளி ராக்போர்ட் குழுவின் கீழ் செயல்படும் 3ஆவது தமிழ்நாடு விமானப்படை (தொழில்நுட்பம்) அமைப்பு மூலம் நடைபெற்றது.
ஆர்வத்தை ஊக்குவித்தல்
இந்த முகாமில், விமானத் தொழில் நுட்பம் தொடர்பான கோட்பாடுகள், ஏரோமாடலிங்க் எனப்படும் வானிலை சோதனைக்கான சிறிய விமான மாதிரிகள் உருவாக்குதல்,அணிவகுப்பு பயிற்சி,நேர்மை, நேர்த்தி, ஒழுக்கம் ஆகிய தலைமைத்துவப் பண்புகள் அடிப்படையில் பயிற்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் விமானப்படை சேவைகளில் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் எதிர்காலத்தில் இந்திய விமானப்படை, கடற்படை மட்டுமின்றி பல்வேறு துறைசார்ந்த நிறுவனங்களில் சேரத் தகுதியான அடித்தள பயிற்சி போன்ற பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் மற்றும் அது சார்ந்த போட்டிகளும் நடத்தப்பட்டன.
இந்தப் பயிற்சி முகாமில் திருச்சி மாவட்டத்திலிருந்து, 11 பள்ளிகளின் தேசிய மாணவர் படையினைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இம்மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படையைச் சார்ந்த 22 மாணவர்கள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இம்முகாமில் பங்கேற்ற 11 பள்ளிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெரிக் மேல்நிலைப் பள்ளி – சிறந்த பள்ளி மற்றும் அணியாகத் தேர்வு செய்யப்பட்டு சிறந்த பள்ளிக்கான விருதிற்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
மேலும், சிறந்த மாணவருக்கான விருதினைப் பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவர் பி.கமலேஸ் கண்ணன் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மேலும், ஓவியப்போட்டி மற்றும் தனிநபர் நடனப் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் டி.அய்யப்பன், எஸ்.எஸ். சிறீகிருத்திகா ஆகியோர் முதலிடமும், பாட்டுப் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி என்.தன்ஷிகா இரண்டாம் இடமும் பெற்றனர்.
இது மட்டுமின்றி, கைப்பந்து, எறிபந்து, மற்றும் குழு நடனப் போட்டிகளில், இரண்டாம் இடம் பிடித்து அளப்பரிய சாதனைகள் புரிந்த பள்ளியாக அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாதனை மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு சிறப்பாகப் பயிற்சி வழங்கிய பள்ளியின் தேசிய மாணவர் படையின் பொறுப்பாசிரியை, இ.மனோண்மணி ஆகியோரைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் அனைவரும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.