ஆசிரியர் விடையளிக்கிறார்

viduthalai

கேள்வி 1: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி, “சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு, கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் அல்லவா?

– வெ.ஜமுனா, ஆரணி.

பதில் 1: வரவேற்க வேண்டிய ‘திராவிட மாடல்’ அரசு முதலமைச்சரின் அறிவிப்பு. ஜஸ்டிஸ் சந்துரு அறிக்கையின் பரிந்துரையை செயல்படுத்திடத் தொடங்கியுள்ளது என்பதற்குச் சான்று.

¥ ¥ ¥ ¥ ¥

கேள்வி 2: பெரும்பாலான வாக்குறுதிகளை தி.மு.க.அரசு நிறைவேற்றியிருக்கிறது என்றும், எந்தக் கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்ற முடியாது என்றும் தொல். திருமாவளவன் கூறியிருப்பதை
பி.ஜே.பி., அ.தி.மு.க. கட்சித் தலைவர்கள் உணர்வார்களா?

– இ.தனசேகரன், அரூர்.

பதில் 2: எழுச்சித்தமிழர் தோழர் திருமாவின் யதார்த்த அணுகுமுறைதான் சரியானது. வாக்குறுதிகளை 100க்கு 100 நிறைவேற்றிய ஓர் அரசியல் கட்சியை யாராவது விரலை மடக்கிக் கூற முடியுமா? முடியாதே! அவர் கூற்று சரியானதுதானே!

¥ ¥ ¥ ¥ ¥

கேள்வி 3: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 20 சதவீதம் கூடுதல் இடங்கள் உயர்த்தி உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உத்தரவிட்டிருப்பது கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

– எஸ்.பூபாலன், திண்டிவனம்.

பதில் 3: அதற்காகத் தானே அந்த அறிவிப்பும், மாணவர்களுக்குக் கூடுதல் இடங்களும். ‘மனு’வின் முதுகெலும்பை உடைக்கும் அமைதிப் புரட்சிச் சாதனை அது!

¥ ¥ ¥ ¥ ¥

கேள்வி 4: “மோடி அரசு, பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குகிறது. சாதாரண முதலீட்டாளர்களை அழிவின் விளிம்புக்குத் தள்ளுகிறது” என்று கூறுகின்ற நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர்  ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை புறந்தள்ள முடியாத நிலையில், ஒன்றிய பிஜேபி அரசு செயல்படுவது ஏழை, எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா?

– க.காமராஜ், செய்யாறு.

பதில் 4: கைப்புண்ணுக்குக் கண்ணாடியா தேவை?

¥ ¥ ¥ ¥ ¥

கேள்வி 5: பாரதிய ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டி ராஜ்பவனில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு  ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தியது, அரசமைப்புச் சட்டத்திற்கும், அவர் எடுத்துக்கொண்ட அரசியல் சாசன உறுதி மொழிக்கும் எதிரான – விரோதமான செயல் ஆகாதா?

– கே.மோகன்காந்தி, விழுப்புரம்.

பதில் 5: அவர் எதில், எப்போது அரசமைப்புச் சட்டப்படி நடந்தார்? உச்சநீதிமன்றத்தின் 2, 3 தீர்ப்புகளில் செவிட்டில் அறைந்தது போன்று இதைச் சொல்லியும், அவருக்குக் கவலை இல்லையே! எல்லாம் ‘பழைய புராணப் பழமொழி’ப்படிதான். “சிவன் கழுத்துப் பாம்பு” வேடத்தின் விளைவு – உரிய தண்டனையை மக்கள் ஒரு நாள் தருவார்கள்.

¥ ¥ ¥ ¥ ¥

கேள்வி 6: தமிழ்நாடு காவல்துறையில் காவிகளின் ஊடுருவல் பெருமளவு இருப்பதாக மக்கள் கருதுவதால், அதனைக் கண்டறிந்து களை எடுக்கும் பணியில் ‘திராவிட மாடல்’ அரசு முனைப்பு காட்டுமா?

– பா.செல்வம், சின்னசேலம்.

பதில் 6: இது மிக மிக முக்கியமானது. பல கீழ்மட்ட, மேல்மட்ட காவல் துறையினர் ‘காவி ஆட்சி’யில் இருப்பதாகவே செயல்படும் ஒரு விசித்திரப் போக்கு. தமிழ்நாடு திமுக அரசின் விரோதிகள் – உட்பகை உள்ளே?

¥ ¥ ¥ ¥ ¥

கேள்வி 7: பீகார் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு அளிக்க பீகார்  அமைச்சரவை முடிவெடுத்திருப்பது, அங்கு நடக்க இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவு என்று கருதலாமா?

– கா.அக்சயா, புதுடில்லி.

பதில் 7: அதிலென்ன சந்தேகம்?

¥ ¥ ¥ ¥ ¥

கேள்வி 8: தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ள தி.மு.க. அரசு, அதனை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த ஆவன செய்யுமா?

– எஸ்.ஆர்.வெங்கடேஷ், மேற்கு தாம்பரம்.

பதில் 8: வெகு முக்கியமான, அவசியம் செய்ய வேண்டிய உடனடித் திட்டம். ஓட்டைகள் இல்லாமல், நேர்மைமிக்க அரசு அதிகாரிகளிடம் இந்தப் பொறுப்பை வழங்கினால் அது வெகுவாக வெற்றிபெறும். மாற்றுத் திறனாளிகள், வீட்டில் உள்ள முதுகுடி மக்கள் குடும்பங்கள் மிக நல்ல முறையில் பயனாளிகளாகி அரசிற்கு நன்றி செலுத்துவார்கள்.

¥ ¥ ¥ ¥ ¥

கேள்வி 9: ஹிந்தி பேசும் மாநிலங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும், ஹிந்தி பேசாத மாநிலங்கள்  முன்னோக்கிச் செல்கின்றன என்றும், ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட வெற்றிக் கொண்டாட்டத்தில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவின் பேச்சை எப்படி பார்க்கிறீர்கள்?

– மு.கவுதமன், பெங்களூரு.

பதில் 9: மராத்திய மண்ணில் தந்தை பெரியார் இப்போது மேலும் தனது தத்துவக் கருத்தியல் கதிர்களைப் பரப்புகிறார் என்பதற்கான அடையாளம்தான் இந்த விழிப்புணர்வு.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *