மைக்கேல் ஹிங்க்சன் (Michael Hingson) பார்வையற்ற மாற்றுத்திறனாளி. கணினி உதிரிப்பாகம் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது நிறுவனம் உலக வர்த்தக இரட்டைக் கோபுரக் கட்டடத்தின் வடக்கில் 78ஆவது மாடியில் இருந்தது.
மைக்கேலின் பார்வையாய்…
அவருக்கு அவரது தோழி பரிசாக வழங்கிய வழிகாட்டி நாய் ரோசெல் (Roselle) ஒரு லேப்ரடோர் ரெட்ரீவர் நாய். மிகவும் நன்றாக பயிற்சியளிக்கப்பட்ட அந்த நாய் மைக்கேலின் பார்வையாகவே இருந்தது.
2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.
தாக்குதல் தொடங்கியபோது, ரோசெல், ஹிங்க்சனின் மேசைக்குக் கீழே உறங்கிக் கொண்டிருந்தது. விமானம் மோதிய அதிர்ச்சியால் எழுந்த ரோசெல், புகை, குழப்பம், மற்றும் சத்தங்களுக்கு மத்தியிலும் அமைதியாக இருந்தது. இது ஹிங்க்சனுக்கு பயப்படாமல் இருக்க உதவியது. ரோசெல், ஹிங்க்சனையும், அவருடன் இருந்த மேலும் 30 பேரையும் 1,463 படிகள் கொண்ட 78 தளங்களைக் கடந்து கோபுரத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற வழிநடத்தியது.
அவர்கள் கீழே இறங்கிக் கொண்டிருக்கும்போது, மேலே சென்று கொண்டிருந்த தீயணைப்பு வீரர்களையும் கடந்து சென்றனர். ரோசெல் அமைதியாக தன்னுடைய எஜமானரையும் அவரோடு வந்தவர்களையும். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் படிகளில் இறங்கி அனைவருக்கும் வழிகாட்டியது.
இவர்கள் கட்டடத்தை விட்டு வெளியே வந்த சில நிமிடங்களிலேயே, கட்டடம் ஒட்டுமொத்தமாக சரிந்தது. சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பீதியடைந்து ஓடியபோதும், ரோசெல் தனது பணியில் முழுமையாகக் கவனம் செலுத்தி, சுரங்கப்பாதையின் நடுப் பகுதிக்கு தனது எஜமானரை அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி பாதுகாத்தது. அங்கு, அவர்கள் இடிபாடுகளால் பார்வை இழந்த ஒரு பெண்ணுக்கும் உதவினர்.
9/11 தாக்குதலுக்குப் பிறகு, ஹிங்க்சன் தனது கணினி விற்பனை வேலையை விட்டுவிட்டு, வழிகாட்டி நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும் “Guide Dogs for the Blind” நிறுவனத்தில் பொது விவகார இயக்குநராகப் பணிபுரிந்தார். ஹிங்க்சன் மற்றும் ரோசெல் ஆகியோர் லாரி கிங் லைவ் (Larry King Live), சிபிஎஸ் மார்னிங் ஷோ (CBS Morning Show) போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றினர்.
ரோசெல் தனது வாழ்நாள் முழுவதும் ஹிங்க்சனுடன் வாழ்ந்தது. 2011 ஜூன் 26 அன்று, ரோசெல் வயிற்றுப் புண் காரணமாக உயிரிழந்தது. ரோசெலின் துணிச்சலான செயலுக்காக, சால்டி (Salty) என்ற மற்றொரு வழிகாட்டி நாயுடன் இணைந்து, “டிக்கின் பதக்கம் (Dickin Medal)” என்ற விருதைப் பெற்றது.
இது விலங்குகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. ஹிங்க்சன் தனது அனுபவங்களை “Thunder Dog: The True Story of a Blind Man, His Guide Dog, and the Triumph of Trust at Ground Zero” என்ற புத்தகமாக எழுதியுள்ளார். ரோசெலின் நினைவாக “Roselle’s Dream Foundation” என்ற ஒரு அமைப்பையும் அவர் நிறுவினார்.