ஆரியமே! எப்போதும் இந்த இரட்டை நாக்கு, இரட்டை வேஷம் தானா? விபீடணர்களே, உங்களுக்கு இனியாவது புத்தி வராதா?

Viduthalai
2 Min Read

‘‘கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்த விடாமல் இருந்ததாக ஒரு தகவல் உண்டு.

தி.மு.க. அரசு பதவியேற்றதும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் உடனே  நிர்வாக ஒப்புதல் வழங்கியதால் நடைபெற்றது!

‘லட்சணக்கான பக்தர்கள்  கூடிய பெருந்திரள் மக்கள் கூட்டத்தில் ஒரு சிறு அசம்பாவிதத்துக்கும்கூட இடம் அளிக்காமல் மிகுந்த ஒழுங்கு முறையுடன், கட்டுக்கோப்பாக விழா நடந்து முடிந்திருப்பது நாட்டிற்கே முன்னுதாரணம். காரணம், வடமாநிலங்களில் இதுபோன்ற பக்தர்களின் பெரு வெள்ளத்தில் நடந்த  ஆன்மீக விழாக்கள் சிலவற்றில் நெரிசல், அசம்பாவிதங்கள், உயிரிழப்பு, துயரம் நடந்ததை நாம் அறிவோம்.

ஆனால், அதுபோன்ற அசம்பாவிதம்கூட திருச்செந்தூரில் இல்லை; அந்த அளவிற்கு மிகச் சிறந்த முறையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை காவல்துறை செய்திருந்தது.

நகையைக் காணவில்லை என்பது போன்ற நான்கு வழக்குகள் மட்டுமே பதிவாகின.’’

– இப்படி எழுதி தமிழ்நாட்டினை வட நாட்டோடு குறிப்பாக உ.பி. போன்ற வடமாநிலங்களுடன்  ஒப்பிட்டு எழுதியுள்ளது. (‘தினமலர்’ 10.7.2025 பக்கம் 17)

– உண்மையை கூறியவர்

‘தினமலர்’ நாளேட்டின் வெளியீட்டாளர் இல. ஆதிமூலம் என்பவர்!

அதே தினமலரும்,  அரும்பாடுபட்டு தி.மு.க. ஆட்சியை அகற்ற முயற்சி எடுத்து – தினசரி அவதூறு பரப்பும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., அண்மையில் சேர்ந்த அடமான, அமித்ஷா கட்சியும் அனுதினமும் கூப்பாடு போட்டு, சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று கூறுவதற்கும் – ‘திராவிட மாடல்’ முதலமைச்சரின் ஒப்பற்ற ஆளுமைக்கும் – இந்த ஒப்பீட்டுக்கும் –  உண்மைப் பொருள் என்ன?

ஆட்சியில் சிறந்தது எது?  ‘திராவிட மாடலா?’ ‘குஜராத் (மனு) மாடலா?’ என்பதோடு இதன் உண்மையை மறைக்க முடியவில்லையே!

ஆரிய மாயை பற்றிய அறிஞர் அண்ணா கூறியது – நினைவுக்கு வருகிறதல்லவா?

‘‘பேசு நா இரண்டுடையாய் போற்றி!’’ என்ற இரட்டை நாக்கு பற்றி தமிழ்நாட்டு மக்களே விளங்கிக் கொள்ளுங்கள். கும்பாபிஷேகம் பற்றிய நமது கொள்கையில் எப்போதும் போல, அதில் மாற்றம் இல்லை. அது பலன் ஏதும் தராது என்ற கொள்கை நிலைப்பாட்டின் ஓருபுறம் என்றாலும் –  முரணைச் சுட்டிக் காட்டி இதனை எழுதுகிறோம்.

 

– ‘கருஞ்சட்டை’

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *