எல்.அய்.சி. பங்குகளை விற்கிறது ஒன்றிய அரசு

Viduthalai
3 Min Read

புதுடில்லி, ஜூலை 11 எல்அய்..சி.யில் ஒன்றிய அரசுக்கு 96.5 சதவீத பங்குகள் உள்ளன.

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.அய்.சி.யின் 3.5 சதவீத பங்குகளை கடந்த 2022-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு விற்பனை செய்தது. அதன்மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.21 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது.

தற்போது, எல்.அய்.சி.யில் ஒன்றிய அரசுக்கு 96.5 சதவீத பங்குகள் உள்ளன. மீண்டும் பங்குகளை விற்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுபற்றிய ஆலோசனை, ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

எவ்வளவு பங்குகளை விற்பது, விலைவிவரம், காலம் ஆகிய விவரங்கள் உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. விதிமுறைப்படி, 2027-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதிக்குள், மேலும் 6.5 சதவீத எல்.அய்.சி. பங்குகளை ஒன்றிய அரசு விற்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

 

அன்புமணியை தலைவர்
பதவியில் இருந்து நீக்கிவிட்டோம்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு

திண்டிவனம், ஜூலை 11 அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். நானே தலைவராக செயல்படுவதால் கட்சி சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் சார்பில் ஒரு மனுவில் கூறியிருப்பதாவது:  பாமகவின் தலைவராக இருக்கும் அன்புமணி சரியாக செயல்படாததால் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்ேடாம். கட்சி நிறுவனரான நானே தற்போது கட்சி தலைவராகவும் தொடர்கிறேன். எனவே எனது தலைமையிலான பாமகவுக்கே கட்சி சின்னத்தை ஒதுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த மாற்றம் சம்பந்தமாக 1413 செயற்குழு உறுப்பினர்கள், 21 தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்த ஆவணங்களையும் அவர் சமர்பித்துள்ளார். ராமதாசின் தனி செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் உள்ள சாமிநாதன்தான் டில்லியில் ராமதாஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

தமிழ்நாடு அரசின் ‘இதயம் காப்போம்’ திட்டத்தின் கீழ்

 16 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன

 சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை ஜூலை 11 ‘‘இதயம் காப்போம்’’ திட்டத்தின் கீழ் 16,275 பேர் பயனடைந்துள்ளனர் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

‘‘இதயம் காப்போம்’’ திட்டம்

நாடு முழுவதும் மாரடைப்பு இறப்பு அதிகரித்து வருகிறது. சரியான நேரத்தில் மாரடைப்புக்கு சிகிச்சை கிடைக்காதது பெரிய பிரச்சினையாக இருந்தது. இதற்கு தீர்வாக தமிழ்நாடு அரசின் ‘இதயம் காப்போம் திட்டம்’ 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.3.37 கோடியில் தொடங்கப்பட்டது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது முதல் 60 நிமிடம் மிகவும் முக்கியமானது. எனவே தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நேரம் ஆகும். இதனால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலில் மாரடைப்பை தடுக்கும் வகையில் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், மாரடைப்புடன் வருபவர்களுக்கு அதனை தடுக்கும் வகையில் ஆஸ்பிரின் 150 எம்ஜி 2 மாத்திரைகள், க்ளோபிடோக்ரல் 75 எம்ஜி 4 மாத்திரைகள், அடோர்வாஸ்டாடின் 10 எம்ஜி 8 மாத்திரைகள் என மொத்தம் 14 மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பிறகு மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது இந்த திட்டம் மூலம் கடந்த மார்ச் மாதம் வரை 16,275 பேர் பயனடைந்துள்ளனர். 2023ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் வரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15,580 பேரும், துணை சுகாதார நிலையங்களில் 695 பேரும் என மொத்தம் 16,275 பேர் மாரடைப்பு அறிகுறியுடன் வந்தவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் மாரடைப்பு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *