சென்னை, ஜூலை 10– “தமிழ்நாடு உள்ளாட்சித் துறைகளில் மாற்றுத் திறனாளி களை நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி, தற்போது விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பி, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று மாற்றுத் திறனாளிகளுக்கு, அமர் சேவா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கான தகுதிகளாக 40% மற்றும் அதற்கு மேல் மாற்றுத் திறன் உள்ளதற்கான மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை ஆகியவை இருக்க வேண்டும். மேலும், 21 வயது நிரம்பியவராக இருத்தல் அவசியம். விண்ணப்பதாரரின் பெயர் அதே உள்ளாட்சி வட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். எந்தவொரு குற்றவியல் தண்டனையும் பெற்றிருக்கக் கூடாது என்பன போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (https://www.tn.gov.in/dtp/pdfs/application_form_nomination_person_disability_town_panchayat_council.pdf)
மாற்றுத் திறனாளிகள்இவ்விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான இணைப்புகளுடன் வரும் ஜூலை 17-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் / நகராட்சி ஆணையர் /மாநகராட்சி ஆணையர் வசம் சமர்ப்பிக்க வேண்டும்.
பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில், ஒவ்வொரு பேரூராட்சி அல்லது நகராட்சிக்கும், ஒரு மாற்றுத் திறனாளி நியமிக்கப்படுவார். 100 வார்டுகளுக்கு மேல் உள்ள மாநகராட்சிகளில், இரு மாற்றுத் திறனாளிகள் நியமிக்கப்படுவார்கள்.
இது குறித்து அமர் சேவா சங்கத்தின் செயலாளர் சங்கர ராமன் கூறுகையில், “மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிக்கும் இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு அரசுக்கும், அமர் சேவா சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அரிய வாய்ப்பை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக் கொண்டு அரசியல் அமைப்புகளில் பங்கேற்க வேண்டும்” என்றார்.