கடலூர், ஜூலை 9 கடலூர் செம்மங் குப்பத்தில் பள்ளி வேன்மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலியான விபத்துக்கு, ரெயில்வே கேட் கீப்பரான மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மா அலட்சியமாக செயல்பட்டதே காரணம் என்று தெரியவந்தது.
ரயில்வே கேட்டை மூடாமல் பங்கஜ் சர்மா தூங்கியதால்தான் இந்த கோர விபத்து நேர்ந்ததாக அந்த பகுதியில் தகவல் பரவியது.
இதனால் கொதித்தெழுந்த அந்த பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்களில் சிலர், பங்கஜ் சர்மாவுக்கு சரமாரியாக அடிகொடுத் தனர். அவர்களிடம் இருந்து தப்பிய கேட் கீப்பர் அங்கிருந்த அறைக்குள் சென்று பதுங்கினார். இதையடுத்து கேட் கீப்பர் அறையை முற்றுகை யிட்டு அவரை மீண்டும் தாக்க பொதுமக்கள் முயற்சி செய்தனர்.
இந்த சூழலில் அங்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தார்.
நீண்ட நேரத்துக்கு பின், சிதம்பரம் ரயில்வே காவல்துறையினர் அங்கு வந்து, பங்கஜ் சர்மாவை அங்கிருந்து சிதம்பரத்துக்கு அழைத்துச்சென்றனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதனிடையே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.