செங்கல்பட்டு, ஜூலை 9– செங்கல்பட்டு பேருந்து நிலையம் இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்கப் படும் என்று அமைச்சர் பி.கே.சேகர் பாபு உறுதி அளித்துள்ளார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தப் பேருந்து நிலையம் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 60 பேருந்துகள் மற்றும் 57 வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (CMDA) கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம், ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக இலவச குடிநீர், உணவு கூடங்கள், மருத்துவ அறை மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், செங்கல்பட்டு, ஆவடி மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் அமைய வுள்ள பேருந்து நிலையங்களில் அன்றாடம் பயணிகளுக்கு பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கும் உணவகங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அகலமான தெருக்கள், நடைபாதை கொண்ட தெருக்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பூங்காக்கள், திட்டமிடப்பட்ட குடியிருப்பு பகுதிகள், வணிக இடங்கள் மற்றும் பொதுப் பகுதிகள் அனைத்தும் இங்கே அமைக்கப்பட உள்ளன. சென்னையுடன் தடையின்றி இணைக்கப்படும் வகையில் செங்கல்பட்டில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
இதனை செயல்படுத்து வதற்காக, செங்கல்பட்டு புதிய நகரத்திற்கான விரிவான மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை சிஎம்டிஏ (CMDA) வெளியிட்டு உள்ளது. 2025 முதல் 2045 வரை நகரத்தை எப்படி எல்லாம் முன்னேற்ற வேண்டும் என்று திட்டமிட்டு இந்த மாற்றங்களை செய்ய உள்ளனர்.
சென்னையைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல், உள்ளூர் வேலைவாய்ப்பு களை உருவாக்குதல் மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே இதன் இலக்காகும். இந்த திட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் மற்றும் திருப்போரூர் தாலுகாக்களைச் சேர்ந்த 60 கிராமங்கள் அடங்கும். இவை சென்னையின் நியூ டவுன் போல செயல்படும்.
அதேபோல் சென்னைக்கு அருகே ஆறாவது புதிய நகரமாக (செயற்கைக்கோள் நகரம்) மாமல்லபுரம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் கீழ் மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சார்பாக இங்கே உயர்த்தப்பட உள்ள கிராமங்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.