புவனேஸ்வர், ஜூலை 8 ஒடிசாவின் மல்காங்கிரி மாவட்டம் போஜ்குடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனாய் போஜ். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 6.7.2025 அன்று பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் கைராபுட் அரசு சுகாதார மய்யத்தை தொடர்பு கொண்டு மருத்துவ உதவி கோரினர்.
இதையடுத்து போஜ்குடா கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் மோசமான சாலை காரணமாக துசாய் படா என்ற கிராமம் வரை மட்டுமே ஆம்புலன்ஸ் செல்ல முடிந்தது. சாலை சேறும் சகதியுமாக இருந்ததால் அதற்கு மேல் செல்ல முடியவில்லை. இதுபற்றி அறிந்த கிராம மக்கள், கர்ப்பிணி சுனாய் போஜை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அதை துணி மூலம் மூங்கிலில் கட்டினர். பிறகு அந்தப் பெண்ணை 10 கி.மீ. தூரம் வரை தங்கள் தோளில் சுமந்து சென்று ஆம்புலன்ஸ் நிற்கும் இடத்தை அடைந்தனர். பிறகு அந்தப் பெண் கைராபுட் சுகாதார மய்யத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.