சென்னை, ஜூலை 8 சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ளநிலம் உள்ளது. காமராஜர் அரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக ப்ளூ பேர்ல் என்ற தனியார் நிறுவனத்துடன் காங்கிரஸ் அறக்கட்டளை கடந்த 1996-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
அதன்பிறகு அந்த நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்ட அந்த நிலத்தை பராமரிப்பது தொடர்பாக ஆட்சேபமில்லா சான்று வழங்கப்படாததால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தனியார் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகக் கூறி அந்த நிலத்தை காங்கிரஸ் அறக்கட்டளை தனது வசம் கையகப்படுத்தியது.
காங்கிரஸ் அறக்கட்டளையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தனியார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது தனியார் நிறுவனம் தரப்பில், “இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது அந்த நிலத்தை காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் தங்களது கட்டுப்பாட்டில் சுவாதீனம் எடுத்துக்கொண்டதால், இந்த வழக்கு செல்லாததாகிவிட்டது. ஆகவே வழக்கை திரும்பப் பெற அனுமதியளிக்க வேண்டும்” என்று கேட்கப்பட்டது. அதையேற்ற நீதிபதி, காங்கிரஸ் அறக்கட்டளைக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
புதிய வண்ண எழில் கோலத்தில் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள்
சென்னை, ஜூலை.8- ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக கண்ணை கவரும் புதிய வண்ணத்தில் அரசுப் பேருந்துகள் வலம்வர காத்திருக்கின்றன.
புதிய வண்ணத்தில் அரசுப் பஸ்கள்
மக்களின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ரயில் போக்குவரத்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது பேருந்து போக்குவரத்துதான். அதிலும் அனைத்து தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தற்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களின் கீழ் 20,508 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படக்கூடிய பேருந்து களில் ஏறி பயணிக்கும் மக்களுக்கு ஏற்ப வசதிகளும் இருக்கும் வகையில், அவ்வப் போது பேருந்துகளை புதிதாகவும் வாங்கி இயக்குகின்றனர். அதன்படி, இதுவரை இயக்கப்பட்ட புதிய அரசு பேருந்துகள் பல்வேறு நிறங்களில் வலம் வந்தன
அந்த வரிசையில் தற்போது கண்ணை கவரும் வகையில் புதிய வண்ணத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) பேருந்துகளை இயக்க இருக்கிறது.
ஆம்னி பஸ்களுக்கு இணையாக…
கருப்பு, சாம்பல், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களை உள்ளடக்கி, பார்த்ததும் கண்ணில் ஒத்திக்கொள்வது போன்ற அழகில் வலம்வர இருக்கிறது. இன்னும் சில நாட்களில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கின்றனர். இந்த பேருந்துகள் பி.எஸ்.6 ரகம் ஆகும். மேலும் ஏ.சி. வசதிகளும், இருக்கை வரிசையில் 2பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையிலும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக களம் இறங்க இருக்கிறது.